சஞ்சய் குமார் அகர்வால்
புதுடெல்லி: ராஜஸ்தான் உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மீது ஊழல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா முன்வைத்ததால் சர்ச்சை எழுந்த நிலையில், சஞ்சய் குமார் அகர்வால் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு நிரந்தரத் தலைமை நீதிபதியாக சஞ்சய் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மாவை ராஜஸ்தானிலிருந்து பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தாவின் கோரிக்கை மீதான நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் சஞ்சய் குமார் அகர்வாலை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரைத்த நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட பிற தலைமை நீதிபதி நியமனங்கள் பின்வருமாறு: வி. காமேஸ்வர் ராவ் (பாட்னா உயர் நீதிமன்றம்), ரவீந்திர வி. குகே (கொல்கத்தா உயர் நீதிமன்றம்), மகேஷ் சந்திர திரிபாதி (மும்பை உயர் நீதிமன்றம்), அஸ்வினி குமார் மிஸ்ரா (பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்), கிருஷ்ண ராம் மொஹபத்ரா (சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்), அல்பேஷ் யஷ்வந்த் கோக்ஜே (மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்) மற்றும் புஷ்பேந்திர சிங் பாட்டி (ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம்).
பின்னணி என்ன? - உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா, தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு கடந்த மாதம் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தக் கடிதத்தில், ‘ராஜஸ்தான் உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் பிரகாஷ் சர்மா அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ளார். இந்நிலையில், அவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, வசதி படைத்த மனுதாரர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கி வருவதாக, தான் ராஜஸ்தான் சென்றபோது சந்தித்த பல நீதிபதிகள் ஆதங்கத்துடன் புகார் தெரிவித்தனர்.
மேலும், பொறுப்பு தலைமை நீதிபதியால் தாங்கள் மிரட்டப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். எனவே, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டுமானால், பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மாவை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும், இதில் தாமதம் செய்வது உயர் நீதிமன்றத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்றும் நீதிபதி சந்தீப் மேத்தா வலியுறுத்தியிருந்தார்.
இதேபோல, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரும் சஞ்சீவ் பிரகாஷ் சர்மா குறித்து பல்வேறு புகார்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பினர். குறிப்பாக, வழக்கறிஞர்களாக முறையாகப் பணியாற்றாத 4 பெண் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க அவர் பரிந்துரை அனுப்பியுள்ளதாகவும் அதில் தெரிவித்தனர்.