இந்தியா

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம் - அரசு நடத்திய பேச்சுவார்த்தை என்ன ஆனது?

மோகன் கணபதி

ராஞ்சி: தங்களின் கோரிக்கைகளை ஜார்க்கண்ட் மாநில அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததை அடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் தலைநகர் ராஞ்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூலை 25-ம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில், நேற்று (ஜூன் 8) இரவு அரசுக்கும், போராட்டத்தை நடத்தும் ஜேபிஎஸ்சி சீர்திருத்த மன்றத்துக்கும் இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் சுதிவ்யா குமார் தலைமையிலான அரசு குழுவுக்கும், ஜேபிஎஸ்சி சீர்திருத்த மன்றத்தின் 10 பேர் கொண்ட குழுவுக்கும் இடையே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர். மேலும், ஞாயிற்றுக்கிழமைக்குள் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், திங்கள்கிழமை சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜேபிஎஸ்சி சீர்திருத்த மன்றத்தின் தலைவர், “கூட்டம் சுமுகமான முறையில் நடைபெற்றது. எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தது. இருப்பினும், ஜேபிஎஸ்சி தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

அமைச்சர் சுதிவ்யா குமார் கூறுகையில், “மாணவர் பிரதிநிதிகளைச் சந்தித்தோம். அவர்களின் கவலைகளை நாங்கள் உணர்கிறோம். அவர்களின் கோரிக்கைகளை அனுதாபத்துடன் பரிசீலிக்க தயாராக இருக்கிறோம். இதற்கான தீர்வு விரைவில் தெரிய வரும்” என கூறினார்.

இதனிடையே, ஏழு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் தேவேந்திரநாத் மஹ்தோ தலைமையிலான மற்றொரு குழு, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக எட்டு பேர் கொண்ட குழுவை அவர்கள் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT