இந்தியா

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கிய ஏபிவிபி பேரணியில் தள்ளுமுள்ளு - பலர் கைது

அனலி

ராஞ்சி: அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி போராடிவரும் மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற ஏபிவிபி அமைப்பினர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

ஏற்கெனவே மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்திவரும் சூழலில், ஏபிவிபி அமைப்பினர் போராடும் மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கிச் செல்ல முயன்ற ஏபிவிபி-யினரை போலீஸார் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் எடுத்தனர்.

இந்நிலையில், போலீஸார் தடுப்புக் காவலில் எடுத்தோரை ஏற்றிச் சென்ற பேருந்தை ஏபிவிபி அமைப்பினர் வழிமறிக்க முயன்ற நிலையில், போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளாக மாறியது.

ஜார்க்கண்டில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், மாணவர் போராட்டத்தை ஆளும் ஜேஎம்எம் - காங்கிரஸ் அரசு ஒடுக்குவதாக எதிர்க்கட்சியான பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “அமைதி வழியில் போராடும் மாணவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையையும் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதான் எங்களின் தெளிவான நிலைப்பாடு,” என்று கூறியிருந்தார்.

இதனை சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய பாஜக மூத்த தலைவர் பாபுலால் மராண்டி, “ஒருவேளை காங்கிரஸ் மாணவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், ஏன் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறக்கூடாது?” என்று வினவினார்.

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்ட விவகாரத்தால் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை இன்று இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்​களாகவே ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (ஜேபிஎஸ்​சி) மற்​றும் ஊழியர் தேர்வு வாரி​யம் (ஜேஎஸ்​எஸ்​சி) மூலம் நடத்தப்படும் தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடப்​ப​தாகக் கூறி மாணவர்​கள் போராடி வரு​கின்​றனர். அரசு தரப்​பில் இதுவரை ஏழு முறை பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்ட போதி​லும், மாணவர்​களின் முக்​கியக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்​லை. இதனால், மாநிலம்​ தழு​விய அளவில்​ போராட்டங்​கள்​ தீவிரமடைந்து வருகின்​றன.

முன்னதாக, மாணவர்கள் அமைப்பினருடன் ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்யா குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, தேர்வுகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் ஒரு குழுவை அமைக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் சுதிவ்யா தெரிவித்தார். ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு சிஐடி சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரின் ராஜினாமாவையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்​கண்ட் மாநில அரசுத் துறை தேர்​வு​களில் வெளிப்படைத் ​தன்​மையை உறுதி செய்ய வேண்​டும், தேர்வு முறை​கேடு​களைத் தடுக்க வேண்​டும் மற்​றும் உள்ளூர்​வாசிகளுக்கு முன்​னுரிமை அளிக்​கும் வகை​யில் வேலை​வாய்ப்​புக் கொள்​கை​களில் திருத்​தம் கொண்டு வர வேண்டும், வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்கைகளை வலி​யுறுத்தி மாணவர்​கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது கவனிக்கத்தக்கது.

நேற்று (திங்கள்கிழமை) அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி இன்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றபோது, ​​அவர்கள் மீது காவல் துறை தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் மூலமும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கட்டுப்படுத்தியது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜார்க்கண்ட் பழைய சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து புதிய சட்டப்பேரவை நோக்கி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் பேரணி மேற்கொண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி காவலில் எடுத்தனர்.

SCROLL FOR NEXT