ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) சார்பில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த ஜூலை 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 2,204 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த ஜூலை 18, 19, 20-ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்தத் தேர்வின் விடைத்தாள்களில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 25-ம் தேதி தலைநகர் ராஞ்சியில் மாணவ, மாணவியர் தொடர் போராட்டத்தை தொடங்கினர். ஜேபிஎஸ்சி மட்டுமன்றி ஜேஎஸ்எஸ்சி நடத்திய போட்டித் தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக மாணவ, மாணவியர் குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து இரு அமைப்புகளும் நடத்திய 22 போட்டித் தேர்வுகளை ஜார்க்கண்ட் அரசு கடந்த 17-ம் தேதி ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட 22 போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,394 அதிகாரிகள், அலுவலர்கள் ஜார்க்கண்ட் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் வேலையிழப்பை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து ஜேபிஎஸ்சி நடத்திய 11-வது, 13-வது சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று தற்போது பணியில் இருக்கும் அலுவலர்கள் சார்பில் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தீபக் ரோஷன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 11-வது, 13-வது சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகள் ரத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கும்படி மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
இதுதொடர்பாக வழக்கின் மனுதாரர்கள் கூறியதாவது: மொத்தம் 22 போட்டித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் 2,394 பேர் வேலையிழக்க உள்ளனர். இதில் 342 பேர் மூத்த அதிகாரிகள் ஆவர். அவர்களில் 207 பேர் தலைமைச் செயலக அதிகாரிகளாகவும், 35 பேர் காவல் துறை அதிகாரிகளாவும் 56 பேர் நிதித் துறை அதிகாரிகளாகவும், 44 பேர் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர்.
முதல்கட்டமாக 11-வது, 13-வது சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஜார்க்கண்ட் அரசு துறைகளில் ஏற்கெனவே ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
தற்போது ஒரே நேரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் அரசு நிர்வாகம் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கும். இந்த சூழலை உணர்ந்தே இரு போட்டித் தேர்வுகள் ரத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இவ்வாறு மனுதாரர்கள் தெரிவித்தனர். போட்டித் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தலைநகர் ராஞ்சியில் மாணவ, மாணவியர் நேற்று 26-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.