போபால்: பட்டப்பகலில் வங்கியில் புகுந்து ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள், ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ராவ்லி மாவட்டத்தில் மகாராஷ்டிர வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கிக் கிளைக்கு நேற்று முன்தினம் பிற்பகலில் 2 பேர் வாடிக்கையாளர்கள் போல வந்தனர். அவர்கள் உள்ளே வந்தவுடன் அடுத்ததாக 3 பேர் உள்ளே நுழைந்தனர். உள்ளே வந்ததும் 5 பேரும் தங்களிடமிருந்த துப்பாக்கிகளை எடுத்து மேலே சுட்டு வாடிக்கையாளர்களை பயமுறுத்தினர். அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கி மேலாளரை அழைத்து லாக்கர் சாவிகளைக் கேட்டனர்.
அவர் தரமறுத்த போது அவரது தலையில் துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கி சாவியைப் பிடுங்கினர். இதில் வங்கி மேலாளர் தலையில் காயமடைந்தார். 2 பேர் லாக்கர் ரூமில் நுழைந்து, வங்கிக் கிளையில் பொதுமக்கள் அடகு வைத்திருந்த நகைகளை அள்ளினர். மீதமிருந்த 3 பேரும் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்திருந்தனர்.
20 நிமிடங்களில்.. அவர்கள் உள்ளே புகுந்த 20 நிமிடங்களில் தங்க நகைகள், ரொக்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிவிட்டனர். போலீஸார் வருவதற்குள் அவர்கள் தப்பியோடிவிட்டதாக வங்கி மேலாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து சிங்க்ராவ்லி போலீஸ் எஸ்.பி. மணீஷ் காத்ரி கூறும்போது, “பட்டப்பகலில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. 9 முதல் 10 கிலோ எடையுள்ள தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
வந்தவர்களில் ஒருவர் மட்டுமே ஹெல்மெட் போட்டு வந்துள்ளார். மற்றவர்கள் அனைவரும் முகங்களை மறைக்காமலேயே வந்துள்ளனர். அருகில் இருந்த கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான முகங்களை வைத்து அவர்களைத் தேடி வருகிறோம். நகைகளைக் கொள்ளை அடித்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடி உள்ளனர்’’ என்றார்.