புதுடெல்லி: பாஜக தேசிய தலைவர் தேர்வு ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. எதிர்கால அரசியல் மற்றும் தேர்தல் செயல் திட்டத்தின் கண்ணோட்டத்தில் இந்தத் தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பாஜக வட்டாரங்களின்படி, தேசிய தலைவர் தேர்தல் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் ஜனவரி 19-ம் தேதி நிறைவடைகிறது. ஜனவரி 20-ம் தேதி வாக்குப் பதிவுக்குப் பிறகு புதிய தலைவரின் பெயர் முறையாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 10 பேர் முன்மொழிபவர்களாகப் பங்கு வகிப்பார்கள்.
இதில் பிரதமர் மோடி, அமித் ஷா இணைந்து நிதின் நபினை முன்மொழியும் வாய்ப்புகள் உள்ளன. அவர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. நிதின் கடந்த வருடம் டிசம்பர் 15-ல் பாஜக செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அப் பதவியை இளம் வயதில் வகிக்கும் முதல் தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.
பாஜக தேசியத் தலைவர் பதவிக்காலம் ஜனவரி 2029 வரை நீடிக்கும். இருப்பினும் 2029 மக்களவை தேர்தலுக்காக இது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. 45 வயதான நிதின் நபின் தற்போது பிஹாரின் சாலை கட்டுமானத் துறை அமைச்சராக உள்ளார்.
அவர் 2006, 2010, 2015, 2020, 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 5 முறை பாங்கிபூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது தந்தை நவீன் கிஷோர் சின்ஹாவும் ஒரு மூத்த பாஜக தலைவர் ஆவார். நிதின் நபினுக்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆதரவு அளித்துள்ளதாக கருதப்படுகிறது.
பாஜக தேசிய தலைவராக மத்திய அமைச்சரான ஜே.பி.நட்டா உள்ளார். இவரது பதவிக்காலம் முடிந்த பிறகு 2024 மக்களவைத் தேர்தலுக்காக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.