புதுடெல்லி: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) குழுவினரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இந்தச் சந்திப்பின்போது விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அமெரிக்க எம்.பி.க்கள் ஜிம்மி பாட்ரோனிஸ், மைக் ரோஜர்ஸ் மற்றும் ஆடம் ஸ்மித் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினருடன் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோரும் பங்கேற்றார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளதாவது: அமெரிக்க எம்.பி.க்களுடனான பேச்சுவார்த்தை மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தியா - அமெரிக்கா இடையிலான பல்வேறு உறவுகள், இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம் மற்றும் உக்ரைன் போர் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் அமெரிக்க நாடாளுமன்றத்துடனான தொடர்புகள் எப்போதும் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்ட பதிவில், “பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான வகையில் விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே நிலுவையில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த எம்.பி.க்கள் குழுவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.