பிரதிநித்துவப் படம்
புதுடெல்லி: பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு நிதி திரட்டியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து புலனாய்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: டெல்லி செங்கோட்டை கார்குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாத பெண்கள் பிரிவை உருவாக்கியுள்ளது. இதற்கு மசூத் அசாரின் சகோதரி சதியா என்பவர் தலைவராக செயல்பட்டு வருகிறார். டெல்லி செங்கோட்டை கார்குண்டு தாக்குதலில் கைதான முக்கிய சந்தேகத்துக்குரிய நபரான தீவிரவாதிகளால் ‘மேடம் சர்ஜன்' என்று அழைக்கப்படும் பெண் மருத்துவர் ஷாகின் சயீத் இந்தியா மீதான தாக்குதலுக்கு நிதி வழங்கும் பொறுப்பாளராக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு இடங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அவர்கள், அதற்கான நிதியை பாகிஸ்தானிலிருந்து திரட்டியுள்ளனர். பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.20,000 (இந்திய மதிப்பில் ரூ.6,400) திரட்டியது தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.