புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு விடைத்தாள்களை ஓஎஸ்எம் முறையில் மதிப்பீடு செய்யப்பட்டதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டிஜிட்டல் முறையில் திரையில் மதிப்பிடும் ஓஎஸ்எம் (On Screen Marking - OSM) அமைப்பு சமரசம் செய்யப்பட்டதை சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அதன் ஒப்பந்ததாரரான COEMPT மீது அது என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது? பெரிதாக எந்த நடவடிக்கையும் இருக்காது.
சிபிஎஸ்இ மற்றும் கல்வி அமைச்சகத்தில் COEMPT ஆல் பயனடைபவர்கள், ஓஎஸ்எம் முறையிலான மதிப்பீட்டு திருத்தப் பணிக்கு COEMPT தகுதியானதாக இருக்காது என்பதை முன்பே அறிந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஏனெனில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சிபிஎஸ்இ வெளியிட்ட ஒப்பந்த கோரிக்கையில், பணியைத் திறம்பட முடிக்கத் தவறினால் ஒப்பந்ததாரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் உரிமையை அது தன்னிடம் வைத்திருந்தது. ஆனால், அடுத்த மாதமே (செப்டம்பர் 2025) கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் தனது உரிமையை நீக்குவதற்கான திருத்தத்தை அது மேற்கொண்டது. இதன்மூலம், COEMPT நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முன்பே, அந்நிறுவனத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதையே இது காட்டுகிறது.
டெண்டர் செயல்முறையில் இதுபோன்ற கற்பனை செய்ய முடியாத முறைகேடுகளை அனுமதித்து லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் மன அமைதியை இழந்து அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை இந்த நாடு இன்னும் எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ளும்? அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்துக்கும் திறமையின்மைக்கும் ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, தன்னையோ தனது சகாக்களையோ எதற்கும் ஒருபோதும் பொறுப்பேற்கச் செய்ததில்லை. எனினும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜதர்மத்தை நிறைவேற்ற பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.