இந்தியா

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அமெரிக்க உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி அழுத்தம்

பால. மோகன்தாஸ்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ‘‘வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்நாட்டுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மேலும், (இந்திய-அமெரிக்க) கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களப் பயன்படுத்தி, விவசாயப் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதில் அமரிக்காவுக்கு உள்ள சுதந்திரத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

          

முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரிக் கொள்கையை நேற்று ரத்து செய்தது. அதன் பிறகு பேசிய அதிபர் ட்ரம்ப், ‘பிரதமர் மோடி எனது மிகவும் நல்ல நண்பர். இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபடி தொடரும். இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா அதிகரிக்கும் என்று கடந்த மே 10, 2025 அன்று அச்சுறுத்தியதன் காரணமாக, அவர் (பிரதமர் மோடி) தனிப்பட்ட முறையில் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தினார்.

பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவரது வேண்டுகோளின் பேரிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்...’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி 2, 2026 அன்று அறிவித்தார். மோடியின் வேண்டுகோளுக்காகவே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்பந்தத்தை ஏற்றதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

எதற்காக ட்ரம்ப்புக்கு மோடி வேண்டுகோள் விடுக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது? அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது? வெள்ளை மாளிகையில் தனது "நல்ல நண்பரை" தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஏன் கவனத்தை சிதறடிக்கச் செய்தார்?

பிரதமர் மோடி தனது பலவீனமான பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வளவு ஆர்வம் காட்டாமல், இன்னும் 18 நாட்கள் காத்திருந்திருந்தால், இந்திய விவசாயிகள் இந்த துன்பத்திலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் தப்பித்திருக்க முடியும்.

மேலும் இந்தியாவின் இறையாண்மையும் பாதுகாக்கப்பட்டிருக்கும். பிரதமரின் பொறுமையின்மை மற்றும் சரணடைதல் காரணமாக இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட்டுக்கு ஒரு கடினமான சோதனையாக மாறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உச்ச நீதி​மன்​றம் தீர்ப்பு என்ன?

அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதல் இல்​லாமல் தனது இஷ்டத்​துக்கு இந்த வரி ​வி​திப்பை ட்ரம்ப் உயர்த்​தி​னார். இதை எதிர்த்து ‘லேர்​னிங் ரிசோர்​சஸ், வி.ஓ.எஸ் செலக்சன்ஸ் என்ற நிறு​வனங்​கள் வழக்கு தொடர்ந்​தன. இந்த வழக்​கு​கள் ஒன்​றிணைக்​கப்​பட்டு அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்​டன.

சர்​வ​தேச அவசர​கால பொருளா​தார அதி​காரச் சட்​டத்​தின் (ஐஇஇபிஏ) கீழ், ஒரு அதிபர் தனது நிர்​வாக உத்​தர​வின் மூலம் இத்​தகைய வரி​களை விதிக்க அதிகாரம் உள்​ளதா என்​பதை உச்ச நீதி​மன்​றம் ஆய்வு செய்​தது.

இதை விசா​ரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையி​லான அமர்வு, வரி​களை விதிக்​கும் அதி​காரம் நாடாளு​மன்​றத்​துக்கே உள்​ளது. ஐஇஇபிஏ சட்​டம் அதிபருக்கு வரி​களை விதிக்க அனு​மதி அளிக்​க​வில்லை என்று கூறியது. இந்த தீர்ப்​பில் மாறு​பட்ட கருத்தை தெரிவித்த ஒரு நீதிப​தி, ‘இந்​தத் தீர்ப்​பால் ஏற்​கெனவே வசூலிக்​கப்​பட்ட பில்​லியன் கணக்​கான டாலர்​களை இறக்கும​தி​யாளர்​களுக்​குத் திரும்ப அளிப்​பது அரசுக்கு பெரிய ‘தலை​வலி​யாக’ இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதி​மன்​றத்தின் தீர்ப்​பின் மூலம், இது​வரை சட்​ட​விரோத​மாக வசூலிக்​கப்​பட்ட 175 பில்​லியன் டாலர் வரிப்​பணத்தை அமெரிக்கா இறக்​குமதி செய்த நாடு​களின் நிறு​வனங்​களுக்கு திரும்ப அளிக்க வேண்​டி வரும். இது பெரும் நிதி நெருக்​கடியை ஏற்​படுத்​தும் என கூறப்​படு​கிறது. உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பு தமக்கு எதி​ராக வந்​ததையடுத்​து, வரி விதிப்பு தொடர்​பாகத் தன்​னிடம் மாற்​றுத் திட்​டம் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார்.

SCROLL FOR NEXT