இந்தியா

“மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப தொகுதி எண்ணிக்கையை கூட்டுவது அவசியம்” - மக்களவையில் அமித் ஷா விவரிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிமுறைகளின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள அரசு விரும்புகிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில், அரசி​யல் சாசன திருத்​த (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றின் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்றைய விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த மசோதாக்கள் தொடர்பாக மக்களவையில் 100-க்கும் மேற்பட்டோர் உரையாற்றி இருக்கிறார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பெண்கள்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அனைவருமே ஆதரிப்பதாகவும், ஆனால் அது செயல்படுத்தப்படும் முறையை மட்டுமே எதிர்ப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் அவர்களின் இந்த எதிர்ப்பு என்பது செயல்படுத்தப்படும் முறைக்கு எதிரானது அல்ல. பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத்தான் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த மூன்று மசோதாக்களின் நோக்கத்தை புரிய வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அவை சட்டமாகும்போது, 2029ம் ஆண்டு முதல் மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.

தற்போது இந்த அவையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எம்பிக்களின் தொகுதிகளில் உள்ள மக்கள் தொகை ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கிறது. சில எம்பிக்கள் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சில எம்பிக்கள் 48 லட்சம் மக்கள் தொகை கொண்ட தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மக்கள் தொகை அதிகரிக்கும்போது தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் உறுப்பினர்களுக்கு சவால்கள் அதிகரிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டுதான் நமது அரசியல் சாசனத்தில் அவ்வப்போது தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்போது, அதில் நாம் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவோம். இதன் காரணமாக எஸ்சி, எஸ்டி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இப்போது எதிர்ப்பவர்கள், எஸ்சி, எஸ்டி உறுப்பினர்களின் எண்ணிககை உயர்வதையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள்.

தொகுதி மறுவரையறையை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பல புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன, பல புதிய மாவட்டங்கள் உருவாக்கின்றன. இவை அனைத்தும் இந்த தொகுதி மறுவரையறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பெண்களுக்கு சரிசமமான அதிகாரத்தை அளிப்பது, கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவது, நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது ஆகியவையே இந்த மசோதாக்களின் நோக்கம்.

இந்த மசோதாக்களை நீங்கள் ஏன் இப்போது கொண்டு வருகிறீர்கள் என பலர் கேட்கிறார்கள். 1971-ம் ஆண்டு முதல் தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே உள்ளது. 1971ல் 56 கோடியாக இருந்த மக்கள்தொகை தற்போது 140 கோடியாக உயர்ந்துவிட்டது. பல தொகுதிகளிலும் மக்கள்தொகை இரண்டு மடங்காகிவிட்டது. 2029க்குள் தொகுதி மறுவரையறையை முடிக்க முடியாது. எனவே 2029 முதல் பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொணடு வரப்பட்டுள்ளன.

2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கவிட்டது. ஆனால் அது முடிந்து அதன் பிறகு அதன் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது என்றால் அதற்கென்று ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் முடிவுகளின்படி நடைமுறைப்படுத்த காலம் பிடிக்கும். எனவேதான், அனைத்து மாநிலங்களின் விகிதாச்சாரத்தை மாற்றாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதே மாற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மசோதாக்களை எதிர்ப்பவர்கள், தங்கள் மாநிலங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்களா அல்லது எதிராக பேசுகிறார்களா என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மதிப்பு, அவரது தொகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிப்பை கொண்டிருக்கவில்லை. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பும் சரிசமமாக இருக்கும்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அது மேலும் குறையும் என்றும் கூறுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவையின் கால கட்டத்தையும் அரசு நீட்டிக்கும். எனவே, நேரம் குறைவாக இருப்பதறகு எந்த காரணமும் இருக்காது” என்று அமித் ஷா விவரித்தார்.

SCROLL FOR NEXT