புதுடெல்லி: அரசியலில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம், ஆனால் அதை இழப்பது மிகவும் எளிது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் (என்டிஏ) சேர்ந்த 37 பாஜக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி அவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்த எம்.பி.க்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் புதிய எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது: பொது வாழ்க்கையில் எழும் ஆபத்துகள் மற்றும் தவறான பழக்கவழக்கங்களை புதிய எம்.பி.க்கள் தெரிந்து கொள்ளவேண்டும். பொதுவாழ்வில் இருக்கும்போது மிகச் சிறிய தவறு கூட பெரிய பிரச்சினையாக மாறக்கூடும். தேவையற்ற அல்லது சந்தேகத்துக்குரிய நபர்களின் உபசரிப்புகளை ஏற்கக் கூடாது.
புதிய எம்.பி.க்கள் தங்களது அதிகாரப்பூர்வ லெட்டர்பேட் மற்றும் கையொப்பங்கள் தவறான நபர்களின் கரங்களுக்குச் சென்றுவிடாமல் மிகவும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொதுவாழ்வில் தூய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்யவே நாம் வந்துள்ளோம். தொகுதி மக்களின் குறைகளை செவிகொடுத்து கேளுங்கள்.
அரசியலில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம், ஆனால் அதை இழப்பது மிகவும் எளிது. பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். இளைஞர்களின் பிரச்சினைகளையும் கருத்துகளையும் பொறுமையுடன் கேட்டறிந்தால் மட்டுமே சரியான தீர்வுகளை நாம் காண முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.