இந்தியா

விண்ணில் திசைமாறிய பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் - இஸ்ரோ சொல்வது என்ன?

டெக்ஸ்டர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (ஜனவரி 12) காலை 9:15 மணிக்கு பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட், இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-என்1 மற்றும் அன்வேஷா உள்ளிட்ட 16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட் கடைசி நேரத்தில் தனது பாதையிலிருந்து விலகிச் சென்றதால், அதில் இருந்த 16 செயற்கைக்கோள்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ராக்கெட் ஏவப்பட்ட முதல் இரண்டு நிலைகள் வெற்றிகரமாக அமைந்தாலும், மூன்றாவது நிலை தொடங்கிய பிறகு, கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் சிக்னல்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர் ராக்கெட் தனது பாதையிலிருந்து விலகியது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து இஸ்ரோ தரப்பில், "மூன்றாவது நிலையின் செயல்பாடு முடியும் தருவாயில், ராக்கெட்டின் சுழற்சி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு, பாதை திசைமாறியது கவனிக்கப்பட்டது. இது குறித்த தரவுகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஓஎஸ்-என்1: இந்த அதிநவீன செயற்கைக்கோள் வேளாண்மை, காடுகள் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார் ஆய்வுகளுக்குத் தேவையான மிகத் துல்லியமான புகைப்படங்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பருவநிலை மாற்றங்களைக் கண்காணிப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கும்.

அன்வேஷா: சோதனை முயற்சியிலான இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களைச் சோதிக்கவும், எதிர்காலப் பயணங்களுக்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்கவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் ஸ்பெயின் நாட்டின் கெஸ்ட்ரல் என்ற தொழில்நுட்ப சோதனை கருவி மற்றும் மொரிஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 14 துணை செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.

SCROLL FOR NEXT