புதுடெல்லி: விண்வெளியில் இருந்து இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்தையும் மிகத் துல்லியமாக வரைபடமாக்கும் முக்கிய திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தேசிய ஊராட்சிகள் தினமான கடந்த வெள்ளிக் கிழமை இஸ்ரோ வெளியிட்டது. நாடு முழுவதற்குமான உயர்-தெளிவுத்திறன் கொண்ட நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பை 1:10000 என்ற விகிதத்தில் வரைபடம் செய்து முடித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. அதாவது வரைபடத்தில் உள்ள 1 செ.மீ என்பது தரையில் வெறும் 100 மீட்டரைக் குறிக்கும். இது ஒரு நெல் வயலுக்கும் குளத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை துல்லியமாக வேறுபடுத்திக் காட்டும் அளவுக்குத் தெளிவானது.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 6,49,481 கிராமங்கள் இருந்தன. இந்த செயற்கைக் கோள் தரவை அரசு நிறுவனங்களுக்கு இஸ்ரோ வழங்கியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தத் தரவுத்தொகுப்பு கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் துணைபுரிவதுடன், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ‘கிராம் மஞ்சித்ரா' (கிராம வரைபடம்) இணையதளத்தில் உள்ள தகவல் பிரிவுகளில் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற அளவில் வலுவான, தரவு சார்ந்த நிர்வாகத்தை சாத்தியமாக்குகிறது” என்று தெரிவித்துள்ளது.
கிராம் மஞ்சித்ரா இணையதளம், உள்ளாட்சி அமைப்புகள் தரவு சார்ந்த வளர்ச்சி முடிவுகளை எடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களை வரைபடமாக்குவது, கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகத் தயாரிப்பதற்கு உதவும்.
இது தரவு அடிப்படையிலான முடிவெடுக்கும் முறையை சாத்தியமாக்குவதுடன், நில வளங்களையும் அவற்றின் பயன்பாட்டு முறைகளையும் கண்டறிய உதவும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் கிராமப்புறங்களில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புடைமையையும் இது மேம்படுத்தும். மேலும் அடிமட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.