இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு மணாலியில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவிக்கின்றனர்.
துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் தாக்குதலுக்குள்ளான போதிலும், பயணிகளைக் காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு, மணாலியில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சியான காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி நகருக்குச் சுற்றுலா சென்ற இஸ்ரேலிய பயணிகள் சிலர், இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டி பதாகைகளை ஏந்தித் தங்கள் நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.
“இது கேப்டன் ஸ்மித். இவர் இஸ்ரேலியர்கள் நிறைந்த விமானத்தைக் காப்பாற்றினார். இஸ்ரேல் மக்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள், உங்களுடன் உறுதுணையாக நிற்கிறார்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் வலம் வந்தனர். மேலும், மணாலி வீதிகளில் ஏ.ஆர். ரஹ்மானின் “வந்தே மாதரம்” பாடல் ஒலிக்க, உள்ளூர் மக்களுடனும் இந்திய சுற்றுலா பயணிகளுடனும் அன்பைப் பகிர்ந்து கொண்டு இனிப்பு வகைகளை வழங்கிய அவர்களின் இந்த நெகிழ்ச்சியான காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றன.
காயமடைந்து சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்ற கேப்டன் ஸ்மித் மச்சார், மேல் சிகிச்சைக்காக அபுதாபிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும், அவர் தற்போது நலமாக இருக்கிறார் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவரது வீரதீரச் செயலைப் பாராட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.