இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடன் பிரதமர் மோடி | கோப்புப் படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தொலைபேசி வாயிலாக அழைத்து இன்று உரையாடினார். அப்போது இரு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு, இருநாட்டு மக்களின் அமைதி மற்றும் செழுமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனநாயக மாண்புகள், வலிமையான பரஸ்பர நம்பிக்கை மற்றும் எதிர்கால தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு இந்த ஆண்டில் இந்தியா – இஸ்ரேல் இடையேயான உத்திசார்ந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். தீவிரவாதச் செயலை அனைத்து வடிவங்களிலும் தாங்கள் எதிர்ப்பதாக கூறிய அவர்கள், அதனை எதிர்ப்பதற்கான நடவடிக்கைக்கு மீண்டும் உறுதி பூண்டனர்.
காசா அமைதி திட்டத்தின் அமலாக்கம் குறித்து பிரதமர் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார். இப்பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் உறுதிபடுத்தினார்.
பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்தியம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.