புதுடெல்லி: இஸ்ரேல் பாகிஸ்தானை நம்பவில்லை என்றும், அமெரிக்காவும் பாகிஸ்தானை ஒரு இடைத்தரகரமாக மட்டுமே பார்க்கிறது என்றும் இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்பவில்லை. அமெரிக்கர்கள் அவர்களை நம்புவது குறித்தும் உத்வேகம் கொள்ள வேண்டாம். ஏற்பாடுகளைச் செய்வதில் இருக்கும் பங்கு மட்டுமே. அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
அமெரிக்காவின் மீது இஸ்ரேல் நம்பிக்கை கொண்டிருக்கிறது. பிராந்தியத்தில் நிலைத்தன்மையைக் கொண்டு வரக்கூடிய வகையில் இந்த இரண்டு வாரங்களை அமெரிக்கர்கள் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அது இஸ்ரேலின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையானதை இஸ்ரேல் தொடர்ந்து செய்யும்” என தெரிவித்தார்.
ஈரான் போரில் பாகிஸ்தான் தன்னை ஒரு சமாதானத் தூதுவராகக் காட்டிக் கொள்ள முயல்கிறது. எனினும், ஈரானுடனான ஒரு தற்காலிகப் போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யுமாறு உண்மையில் அமெரிக்காதான் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் சுதந்திரமான ராஜதந்திர செயல்பாடு குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது.