இந்தியா

நாடாளுமன்றத்தில் பொதுப் பிரச்சினைகளை எழுப்புவது குற்றமா? - ஆம் ஆத்மி கட்சிக்கு ராகவ் சத்தா கண்டனம்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியை நேரடியாகத் தாக்கிப் பேசிய ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா, “எனது மவுனத்தை தோல்வியாகக் கருதக்கூடாது. நாடாளுமன்றத்தில் பொதுப் பிரச்சினைகளை எழுப்புவது குற்றமா?” என்று கேள்வி எழுப்பினார்.

ஆம் ஆத்மியின் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய துணைத் தலைவராக அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

          

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ராகவ் சத்தா வெளியிட்ட வீடியோ பதிவில், "நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் பொதுப் பிரச்சினைகளை எழுப்புகிறேன். ஒருவேளை, நாடாளுமன்றத்தில் வழக்கமாக எழுப்பப்படாத தலைப்புகளையும் நான் எழுப்பக்கூடும். ஆனால், பொதுப் பிரச்சினைகளை எழுப்புவது குற்றமா? நான் ஏதேனும் குற்றம் செய்துவிட்டேனா? நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா?.

ராகவ் சத்தாவை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் தடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை செயலகத்திடம் தெரிவித்துள்ளது. ஆம், ராகவ் சத்தாவுக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கக்கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான எனது உரிமையைப் பறித்தவர்கள், என்னை மவுனமாக்கிவிட்டார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எனது மவுனத்தை எனது தோல்வியாகக் கருதாதீர்கள். நேரம் வரும்போது வெள்ளப்பெருக்காக மாறும் நதி நான்.

ஜொமாட்டோ மற்றும் பிளிங்கிட் விநியோக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நான் பேசுகிறேன். உணவில் நடைபெறும் கலப்படம் குறித்த பிரச்சினையை நான் எழுப்புகிறேன். சுங்கச்சாவடிகள் மற்றும் வங்கிக் கட்டணங்கள் வாயிலாக நடைபெறும் கொள்ளை குறித்து நான் பேசுகிறேன்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எவ்வாறு 12 மாதங்களில் நம்மை 13 முறை ரீசார்ஜ் செய்ய வைக்கின்றன என்பது குறித்தும் நான் பேசுகிறேன். அவர்கள் பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லும் வசதியை வழங்குவதில்லை. ரீசார்ஜ் காலம் முடிந்ததும், உள்வரும் அழைப்புகளையும் அவர்கள் துண்டித்துவிடுகிறார்கள். இதுகுறித்தெல்லாம் கேள்வி எழுப்புகிறேன்.

இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் நான் நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். இந்தப் பிரச்சினைகளை நான் எழுப்பியதன் விளைவாக, நாட்டின் சாமானிய மக்கள் பயனடைந்தனர். ஆனால், அது ஆம் ஆத்மி கட்சிக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது?. என்னை பேசுவதிலிருந்து தடுக்க ஏன் விரும்புகிறார்கள்? எனது குரலை ஒடுக்க ஏன் விரும்புகிறார்கள்?.

எது எப்படியாயினும், நீங்கள் எனக்கு அளவற்ற அன்பை வழங்கி வருகிறீர்கள். நான் உங்கள் பிரச்சினைகளை எழுப்பும்போதெல்லாம், நீங்கள் எனக்கு ஆதரவளிக்கிறீர்கள், உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதேபோலவே, என் கையைப் பிடித்துக்கொண்டு எனக்குத் துணையாக நில்லுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களுக்காகவே இருக்கிறேன்” என்று ராகவ் சத்தா கூறினார்.

SCROLL FOR NEXT