இடது: டினு யாதவ்
புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு, கைது நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் உத்தரப் பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது. எஸ்ஐடி விசாரணை தொடங்கப்பட்டு இன்றுடன் ஆறு நாள் நிறைவடைய உள்ள நிலையில், இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில், கைது உள்ளிட்ட சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள எஸ்ஐடி தயாராகி வருகிறது.
ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பக் ராயின் நெருங்கிய உதவியாளரான டினு யாதவ் என்றழைக்கப்படும் ராம் சங்கர் யாதவ் மீது காணிக்கை திருட்டு தொடர்பாக பல புகார்கள் கிளம்பியுள்ளன. இதையடுத்து, டினு யாதவ் உட்பட குற்றம் சாட்டப்பட்ட பலர் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
காணிக்கையின் ரொக்கப்பணம் எண்ணும் பணியில் டினு யாதவ் முக்கியப் பங்கு வகித்து வந்தார். இவர், சம்பக் ராயின் வாகன் ஓட்டுநராக இருந்தவர். மேலும், சம்பக் ராயின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்.
காணிக்கை திருட்டு புகாரை அடுத்து, டினு யாதவ் சில மாதங்களுக்கு முன் பணியிலிருந்து விலக்கப்பட்டார். காணிக்கை எண்ணும்போது பதிவான சிசிடிவி காட்சிப்பதிவுகளை அழித்து விட்டதாக இவர் மீது புகார் உள்ளது.
எனவே, முக்கிய சந்தேக நபர்களில் ஒருவராக டினு யாதவ் கருதப்படுகிறார். கோயில் நிதியிலிருந்து ரூ.50 கோடியைப் பயன்படுத்தி இவர் ஆடம்பரமான வீடு ஒன்றைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் 10 நிர்வாகிகள் மற்றும் சில வங்கி ஊழியர்களிடன் பல மணி நேரம் தீவிர விசாரணைகளை எஸ்ஐடி நடத்தியது.
இதில் கிடைத்த சில ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் மீது சட்டரீதியான விசாரணையை எஸ்ஐடி தீவிரப்படுத்த உள்ளது. இதில், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
ரொக்கப் பணம் எண்ணும் பணியில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள், அறக்கட்டளையிலிருந்து நீக்கப்படலாம். அயோத்தியிலிருந்து தலைநகர் லக்னோவிற்கு இன்று எஸ்ஐடி திரும்புகிறது. பின்னர், முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தனது இடைக்கால அறிக்கையை எஸ்ஐடி சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கையில், காணிக்கைகளாகப் பெறப்பட்ட தங்கம், வைரம் மற்றும் வெள்ளி கட்டிகளும், நகைகள் குறித்த விவரங்களும் முக்கியத்துவம் பெற உள்ளன. இது தொடர்பாக கோயில் அதிகாரிகள் வைத்துள்ள பதிவுகளுக்கும், நன்கொடை ரசீதுகளுக்கும் இடையே பல முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.