புதுடெல்லி: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு விதித்த இடைக்கால தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதையடுத்து, உச்ச நீதிமன்றமே தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி சட்டமாக்கியது. இதை எதிர்த்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் கே.வெங்கடாச்சலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு,துணைவேந்தர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும் தமிழக அரசு தரப்பில்உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், அபிஷேக்மனு சிங்வி ஆஜராகி, துணைவேந்தர் நியமன சட்டத்தை எதிர்த்து மே 12-ம் தேதி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்து, இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்காமலேயே இடைக்கால தடையை விதித்ததாக குறிப்பிட்டனர்.
அப்போது தலைமை நீதிபதி இது உண்மையா என்று கேட்டதற்கு பதில் அளித்த எதிர்மனுதாரர் வழக்கறிஞர் டிஎஸ் நாயுடு, இடைக்காலமாக மட்டுமே தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இடைக்கால தடை விதிப்பதற்கு முன் வாதங்களை முன்வைக்க அரசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதா என நீதிபதி கேட்டார். இதற்கு பதில் அளித்த அபிஷேக் மனு சிங்வி, தடை விதிக்கப்பட்ட பிறகே வாதங்கள் கேட்கப்பட்டதாக குறிப்பிட்டார். இதை டிஎஸ் நாயுடு மறுத்தார்.
தமிழக அரசு வழக்கறிஞர் கூறும் போது, இந்த விவகாரத்தை விடுமுறை கால அமர்வு விசாரிக்க முடியாது.உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதை குறிப்பிட்டும் மைக்கை ஆப் செய்துவிட்டு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து அரசுக்கு எதிராக கருத்துகளையும் உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரம் நிலுவையில் இருக்கும்போது விடுமுறை கால அமர்வு எப்படி விசாரித்தது, அதுவும் துணைவேந்தர் நியமன சட்டம் மாதிரியான அரசமைப்பு சார்ந்த விவகாரங்களை விசாரித்து இடைக்கால தடையை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது. மேலும் சட்டவிரோதமாக துணைவேந்தர்கள் நியமித்தால் அதை உயர் நீதிமன்றம் தடுத்து இடைக்கால தடை விதித்திருக்க முடியுமே என்றனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்தது. மேலும் நிலுவையில் உள்ள இந்த மனுவை 6 வாரங்களுக்குள் விசாரிக்கவும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே தெரிவித்த கருத்துகளை கேட்கவும் உத்தரவிட்டது.