ஹைதராபாத்: மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள இந்தியப் பாதுகாப்பு படைகள் உறுதிபூண்டுள்ளதாக முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் துண்டிகல் அருகே உள்ள விமானப் படை அகாடமியில் நடைபெற்ற 216-வது பயிற்சிப் பிரிவின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய சவுகான் கூறியதாவது: போர் மற்றும் போரிடும் செயல்முறை தற்போது ஒரு பெரிய புரட்சியின் விளிம்பில் உள்ளது. இந்த நிலையில், இந்திய பாதுகாப்புப் படைகள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதற்கும், சீர்திருத்தங்களை உள்வாங்கிக் கொள்வதற்கும் உறுதிபூண்டுள்ளன.
இந்தியாவின் வலிமையானது உறுதியான நிறுவனங்கள், ஜனநாயக நிலைத்தன்மை மற்றும் நமது ஆயுதப்படைகளின் அசைக்க முடியாத திறனைச் சார்ந்து உள்ளது. நமது பாதுகாப்புப் படை செயல்பாடுகளின் தீவிரம் குறைந்திருக்கலாம். ஆனால், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. புதிதாகப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆயுதப் படைகளின் ஆழமான மாற்றத்தின் ஒரு காலகட்டத்தில் இந்திய விமானப்படையில் நுழைகிறார்கள்.
ஒருங்கிணைந்த கட்டமைப்புகள், கூட்டு நடவடிக்கைகள் மற்றும் தேசத்தின் தற்சார்பு இந்தியா முயற்சி ஆகியவை நமது ராணுவ வலிமையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய கூறுகளாக உள்ளன.
பழைய களங்களில் நடைபெறும் போர்கள் எப்போதும் சவாலானவையாகவும், பெரும்பாலும் கொடூரம் நிறைந்தவையாகவும் இருக்கும்.
ஆனால், புதிய களங்களில் போர்கள் என்பது புத்திசாலித் தனமானவை யாகவும், வேகமானவையாகவும், அறிவு, புதுமை மற்றும் முன்முயற்சியால் வடிவமைக்கப் பட்டவையாகவும் இருக்கும். இந்த புதிய எல்லைகளில் தேர்ச்சியுறும் படைதான் எதிர்கால மோதல்களில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு சவுகான் கூறினார்.