புதுடெல்லி: கட்சி நிகழ்வுகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரு சரணங்களை மட்டுமே பாட காங்கிரஸ் செயற்குழு எடுத்த முடிவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் இந்த நடவடிக்கை அவர்களின் தேசபக்தியின் மீதே கேள்விக் குறியை எழுப்பியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவின் போது, தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடப்பட்ட நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோர் உரையாடிக் கொண்டிருந்ததாக பாஜக குற்றம் சாட்டியதுடன், அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், 1937-ம் ஆண்டு கட்சியின் தீர்மானத்தை மேற்கோள் காட்டி, இனி கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸின் இந்த முடிவுக்கு எதிராக நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், வந்தே மாதரத்தை கவுரவிக்க காங்கிரஸ் மறுப்பது மிகவும் வருந்தத்தக்கது என்றும், அரசியலமைப்பு ரீதியாக இது ஒரு மிகவும் ஆபத்தான போக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் உயரிய அமைப்பான நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கும், தேசிய பாடலுக்கும் கீழ்ப்படிய மறுப்பவர்களின் தேசபக்தி சந்தேகத்திற்குரியதாகிறது என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், 1937-ல் முஸ்லிம் லீக்கின் அதிதீவிர கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் பணிந்ததே நாட்டின் பிரிவினைக்குக் காரணமாக அமைந்தது. இப்போதும் அதுபோல தீவிரவாத சக்திகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்வது நாட்டின் எதிர்காலத்திற்குப் பேராபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார். காங்கிரஸின் இந்த முடிவு முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், எதிர்காலத்தில் தீவிர அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.