புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மால்வன் என்ற போர்க்கப்பல், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது எதிரி நாட்டின் நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் திறன் படைத்தது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய கடற்படைக்கு நவீன வசதிகளுடன் கூடிய 8 சிறப்பு போர்க்கப்பல்கள் தாயாரிக்க கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த கப்பல்கள் எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து டார்பிடோ குண்டு மூலம் அழிக்கும் திறன் வாய்ந்தவை மற்றும் ஆழம் குறைந்த கடலோர பகுதியில் பயணிக்கும் திறன் படைத்தவை.
கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் தயாரித்த ஐஎன்எஸ் மால்வன் என்ற போர்க்கப்பல் கடற்படையிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பலில் 80 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டு தயாரிப்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 80 மீட்டர் நீளம் உள்ள இந்த கப்பல் 1100 டன் எடை கொண்டது.
வாட்டர் ஜெட் இயந்திரம் மூலம் இந்த கப்பல் இயங்கும். இதில் டார்பிடோ குண்டுகள், நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ராக்கெட் குண்டுகள், எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கும் நவீன சென்சார்கள், ரேடார்கள், சோனார் கருவிகள் உள்ளன.