இந்தியா

ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த முதலில் திட்டம்: டெல்லி குண்டு வெடிப்பு குறித்து என்ஐஏ புதிய தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை​யில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்​திய தீவிர​வாதி உமர் முதலில் ஜெயின் கோயி​லில் தாக்குதல் நடத்த திட்​ட​மிட்​ட​தாக​வும் போக்​கு​வரத்து நெரிசலால் கடைசி நேரத்​தில் திட்​டத்தை மாற்றியதாக​வும் என்ஐஏ குற்​றப்பத்​திரி​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்​ளது. டெல்​லி​யில் செங்​கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்​பர் 10-ம் தேதி கார் குண்டு வெடிப்​பில் 11 பேர் உயி​ரிழந்​தனர். பலர் படுகாயம் அடைந்​தனர்.

இந்த தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசா​ரணை நடத்தி 7,500 பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை கடந்த மே மாதம் டெல்லி சிறப்பு நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தது. இதனை சிறப்பு நீதி​மன்​றம் சமீபத்​தில் விசா​ரணைக்கு ஏற்​றுக்​கொண்​டது.

என்ஐஏ தாக்​கல் செய்த குற்​றப்​பத்​திரி​கை​யில், “கார் குண்டு வெடிப்பை நிகழ்த்​திய தற்​கொலைப்​படை தீவிர​வா​தி​யான உமர் நபி​யின் நடமாட்​டத்தை ஆய்வு செய்​த​தில், அவர் டெல்​லி​யின் மிக​வும் பழமை​யான ஜெயின் கோயி​லான லால் மந்​திரில் தாக்​குதல் நடத்த முதலில் திட்​ட​மிட்​டது தெரிய​வந்​துள்​ளது. எனினும் மத்​திய டெல்லி போக்​கு​வரத்து நெரிசல் மற்​றும் போலீ​ஸாரின் கண்​காணிப்பு காரண​மாக கடைசி நிமிடத்​தில் திட்​டத்தை மாற்ற வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

அதன்​படி வெடிகுண்​டு​கள் நிரப்​பப்​பட்ட காரில் லால் மந்​திர் நோக்கி சென்று கொண்​டிருந்த அவர், யூ-டர்ன் அடித்து செங்​கோட்​டையை அடைந்​தார். அடுத்த சில நிமிடங்​களில் குண்​டு​களை வெடிக்​கச் செய்​தார்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சிறுநீரிலிருந்து குண்டு..

மேலும் அந்த குற்​றப்​பத்​திரி​கை​யில் “நபி மற்​றும் அவரது கூட்டாளி​யான ஷாஹீன் சயீத் ஆகியோ​ருக்​குச் சொந்​த​மான பென் டிரைவ்​களில் கண்​டெடுக்​கப்​பட்ட பிடிஎஃப் கோப்​பு​களில், யூரியா நைட்​ரேட்​டைப் பயன்​படுத்தி வெடிபொருட்​கள் தயாரிக்கும் முறை குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

மேலும், சிறுநீரிலிருந்து யூரி​யா​வைப் பிரித்​தெடுப்​ப​தற்​கான முறை​யும் அந்த ஆவணங்​களில் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. நபி​யின் அறை​யில் சிறுநீர் நிரம்​பிய ஒரு பாலித்​தீன் பையைக் கண்​ட​தாக பெண் ஒரு​வர் சாட்​சி​யளித்​தார். இதன் மூலம் நபி, சிறுநீரில் இருந்து குண்டு தயாரிக்​கும் முயற்​சி​யில் ஈடுபட்​டது உறுதியானது” என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT