ஜெய்ப்பூர்: உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் தானியங்கி ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்திய பாதுகாப்புத் துறையை சேர்ந்த ஐஜி டிபென்ஸ் நிறுவனம், தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில், முற்றிலும்உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ஜ்வாலா எம்.கே.-1’ என்ற நாட்டின் முதல் தானியங்கி ஆளில்லா விமான (ட்ரோன்) எதிர்ப்பு மைக்ரோ ஏவுகணையை உருவாக்கி உள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் ஏவு மையத்தில், இந்த ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
“இந்த ஏவுகணை 2 முதல் 5 கி.மீ. தொலைவில் உள்ள எதிரி ட்ரோன்களையும், தரையிலிருந்து 50 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் ட்ரோன்களையும் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது” என்று ஐஜி டிபென்ஸ் தெரிவித்துள்ளது.
இதில் ‘கிரிட்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி செயல்பாடு மற்றும் போர் மேலாண்மை மென்பொருள் முக்கிய அம்சமாக உள்ளது. இது பல்வேறு சென்சார்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து, இலக்குகளைக் கண்டறிந்து வகைப்படுத்துகிறது. மேலும், தாக்குதல் தொடர்பான முடிவுகளை எடுக்கவும், ஏவுகணைத் தாக்குதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ட்ரோன் தாக்குதல் நடத்தும் சூழலிலும், இந்த ஏவுகணையில் உள்ள வெடிகுண்டில் இருந்து சிதறும் உலோகத் துண்டுகள் சுற்றியுள்ள மற்ற ட்ரோன்களையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
உளவு பார்த்தல், கண்காணிப்பு மற்றும் ராணுவ முகாம்கள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு குறைந்த செலவிலான ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிரான நடவடிக்கையாக இந்த ஏவுகணை அமைப்பு உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.