இந்தியா

“இந்திய விண்வெளி பொருளாதாரம் 2034-க்குள் 45 பில்லியன் டாலர்களை எட்டும்” - ஜிதேந்திர சிங்

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 8 ஆண்டுகளில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர், “இந்தியா தனது தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்துவதைத் தாண்டி, உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த வர்த்தக விண்வெளி நிறுவனங்களைக் கட்டமைத்து வருகிறது. இந்திய நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும், உலகச் சந்தைகளில் அவற்றின் இருப்பை விரிவாக்குவதற்கும், அதிக முதலீடு, விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் ஆகியவை இன்றியமையாதவை.

2019-2020-ல் இந்தியாவின் விண்வெளித் துறை தனியார் பங்கேற்புக்கு அனுமதிக்கப்பட்டது. அதன் விளைவாக, வெறும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைத்துள்ளன. கணிசமான தொழில்நுட்ப நிபுணத்துவம், முதலீடு, நீண்ட கால அர்ப்பணிப்பு தேவைப்படும் ஒரு துறையில், அரசு நிறுவனங்களையும் தனியார் தொழில்துறையையும் ஒன்றிணைப்பதன் ஆற்றலை இந்தியா அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறது.

தற்போது சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், அடுத்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் 40 முதல் 45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும்” என்று தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT