புதுடெல்லி: வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவுக்கு, அமெரிக்க எம்பி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இது எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “எப்சிஆர்ஏ குறித்த கருத்துகளை நாங்கள் கவனித்தோம். இந்தியாவுக்கான சட்டங்களை இந்தியா இயற்றுவது என்பது அதன் உள்நாட்டு விவகாரம். நாட்டின் நாடாளுமன்றமே இது குறித்த முடிவுகளை எடுக்கிறது. மேலும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வெளிநாட்டுப் பண பரிமாற்றத்தை முறைப்படுத்துகின்றன என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிதி நடைமுறையை கடுமையாக்க வெளிநாட்டு நிதி திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த மாதம் 25-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவில் உள்ள தனி நபர்கள், சங்கங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை வெளிநாடுகளிடம் இருந்து நிதி பெறுவதையும், அவற்றைப் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்தும் தற்போதைய வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் 2010-ல் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, பொதுநலன், ஜனநாயக நிறுவனங்களை பாதுகாப்பது ஆகியவற்றை உறுதி செய்வதே எப்சிஆர்ஏ-வின் நோக்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, ‘ஒரு அமைப்பின் எப்சிஆர்ஏ பதிவு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ, அந்த அமைப்பின் வெளிநாட்டுப் பங்களிப்புகளையும், அது தொடர்பான சொத்துகளையும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகார அமைப்பு நிர்வகிக்கும்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத நிறுவனங்களைப் பொறுத்தவரை, நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பு அத்தகைய சொத்துக்களை நிர்வகிக்கும்போது அவற்றின் மத தன்மையைப் பாதுகாக்க வேண்டும்’ என்றும் இந்த மசோதா குறிப்பிடுகிறது.
வெளிநாட்டு நிதியுதவி பெறும் அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இந்த திருத்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒரு அமைப்பு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்கான தகுதியை இழக்கும்போது இது அவசியமாகிறது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
வெளிநாட்டுப் பங்களிப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதோடு, நடைபெற்று வரும் தொண்டு நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்ட முறையில் தொடர்வதை உறுதி செய்வதற்காகவும் இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்துக்கு அகில இந்திய கத்தோலிக்க யூனியன் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், இந்த சட்டத் திருத்தம் குறித்து விமர்சித்துள்ள அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்பி ரிலே மூர், “இந்த சட்டத் திருத்தம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு தெளிவான தாக்குதலை வெளிப்படுத்துகிறது. இந்த சட்டம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை எதிர்மறையாக பாதிக்கக்கூடும்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.