பெர்லின்: வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் புகழாரம் சூட்டி உள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஜெர்மனிக்கு இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
பெர்லின் நகரில் வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் அவர் பேசியதாவது: பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி உயர்வு, ஊதிய உயர்வு கோரி நடைபெறும் போராட்டங்கள் வன்முறையாகவும், பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படும் நிகழ்வுகளாகவும் மாறி வருகின்றன. ஆனால், இந்திய சமூகத்தினர் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள்.
தங்கள் குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பது உலக நாடுகளுக்குத் தெரியும். இந்தியர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையிலோ, சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல்களிலோ ஈடுபட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால்தான், எந்தவொரு நாட்டிலும் அவர்கள் அன்போடு வரவேற்கப்படுகிறார்கள். ஜெர்மனிக்கு புதிதாக உயர்கல்வி கற்க வரும் இந்திய மாணவர்களுக்கு குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்புலத்தைக் கொண்டவர்களுக்கு இங்கு நீண்டகாலமாக வாழும் இந்தியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்தியா-ஜெர்மனி இடையிலான பொருளாதார மற்றும் மக்கள் தொடர்பை வலுப்படுத்துவதில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார். தனது பயணத்தின்போது ஜெர்மனி அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகம், முதலீடு மற்றும் புதிய தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.