இந்திய பைலட் ஸ்மித் மச்சார்

 
இந்தியா

‘இப்படி சாகக்கூடாது என்று போராடினேன்” - இந்திய விமானி ஸ்மித் மச்சார் விவரிப்பு

வெற்றி மயிலோன்

துபாய்: துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தில் தாக்குதலுக்கு உள்ளான இந்திய விமானி ஸ்மித் மச்சார், தாக்குதல் சம்பவத்தின்போது, ‘ஏதாவது செய். நீ இப்படி இறந்துவிடக் கூடாது' என்று சொல்லிக்கொண்டதாகக் கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி ஒரு செய்தி ஊடகத்திற்கு இந்திய விமானி ஸ்மித் மச்சார் அளித்த பேட்டியில், “அன்று விமானப் பயணம் வழக்கம்போலவே தொடங்கியது. அனைத்து நடைமுறைகளும் சரியாகவே இருந்தன. அந்தத் துணை விமானியுடன் நான் இணைந்து பணியாற்றியது அதுவே முதல்முறை. விமானம் புறப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில், திரும்புவதற்கான பயண விமானத்தை இயக்கவிருந்த மற்றொரு கேப்டன், எங்களைச் சந்திப்பதற்காக காக்பிட்டிற்குள் வந்தார்.

அதே நேரத்தில், துணை விமானியும் கழிவறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார். அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அந்த துணை விமானி, தான் பிரார்த்தனை செய்ய விரும்புவதாகவும், எனவே வெளியே செல்லுமாறும் அந்த விமானியைக் கேட்டுக்கொண்டார்.

அவரை பிரார்த்தனை செய்ய சொல்லிவிட்டு, நான் எனது இருக்கையில் அமர்ந்து, தரையிறங்கும் நேரம் மற்றும் எரிபொருள் அளவு குறித்து கணினியில் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தத் துணை விமானி எனக்குப் பின்னால் நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

திடீரென்று எனது தலையின் பின்புறத்தில் மிகவும் பலமான அடி விழுந்தது. ஏதோ ஒரு வலிமையான பொருள் தாக்கியது போல உணர்ந்தேன். ஆரம்பத்தில் விமானத்தின் மேற்கூரையில் ஏதோ ஒன்று உடைந்து என் மீது விழுந்ததாக நினைத்தேன். ஆனால் சில நொடிகளிலேயே நான் தாக்கப்படுகிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன். தாக்குதலின் விளைவாகத் எனது பார்வைத்திறன் மிகவும் சுருங்கிவிட்டது.

என்மீது மேலும் தாக்குதல் நடத்தப்படாமல் தற்காத்துக்கொள்வதற்கான முயற்சிகளை செய்தேன். என் சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு, தாக்குதலைத் தடுக்க முயன்றபோது கையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, மற்றொரு விமான கேப்டனை மீண்டும் காக்பிட் (cockpit) பகுதிக்குள் வரவழைக்க முயற்சித்தேன்.

மற்றவர்களையும் தாக்குவேன் என்று அந்த துணை விமானி மிரட்டி கதவை மூடினார். அதற்கு முன்பாக, நான் எனது சக ஊழியரின் பெயரை உரக்கக் கூவிக்கொண்டு, கதவைத் திறப்பதற்கான சுவிட்சை இயக்க முயன்றபோது, ​​எனக்கு முதன்முதலில் மயக்கம் ஏற்பட்டது. எப்படியோ போராடி கதவை திறக்க முயன்றது லேசாக நினைவிருக்கிறது.

சிறிது நேரத்திலேயே, விமானத்தின் என்ஜின்களின் வேகம் குறைவதையும், விமானம் கீழ்நோக்கிச் சரிவதையும் உணர்ந்தேன். அதன்பிறகு எனக்கு நினைவிருப்பது என்னவென்றால், கதவு திறந்திருக்க, நான் காக்பிட் பகுதிக்கும் விமானத்தின் கேலரி பகுதிக்கும் இடையில் கிடந்ததுதான்” என்றார்.

உயிர் பிழைக்க மாட்டோம் என்று தோன்றியதா என்ற கேள்விக்கு, "ஒரு கட்டத்தில் எனக்கு அது புரிந்தது. அப்போது நான் எனக்குள்ளேயே, ‘ஸ்மித், ஏதாவது செய். நீ இப்படி இறந்துவிடக் கூடாது' என்று சொல்லிக்கொண்டேன்

அவசரகாலச் சூழலில் விமானத்தின் கட்டுப்பாட்டைத் தன் வசம் எடுத்துக்கொண்ட மற்றொரு கேப்டன் பாராட்டுக்குரியவர். அதைத் தனது வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். அந்த நாளில் நான் கண்ட ஒரு விஷயம் என்னவென்றால், உயிர் பிழைக்க வேண்டும் என்ற அனைவரிடமும் இருந்த அந்த அசைக்க முடியாத உறுதிதான். பணியாளர்கள், பயணிகள் என அனைவரும் அந்த உறுதியுடன் இருந்தனர்.

சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, அந்தத் தாக்குதலின் முதல் தருணங்கள் அவ்வப்போது நினைவுக்கு வந்தன. அப்போது எனக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. உண்மையைச் சொல்லப்போனால், விமானம் தரையிறங்கியதை உணர்ந்தபோதுதான் நான் ஆபத்திலிருந்து விடுபட்டுவிட்டேன் என்பதை உணர்ந்தேன்.

விமானத்தின் கேலரி பகுதியில் மருத்துவர் ஒருவர் எனக்கு சிகிச்சை அளித்தார். அதே வேளையில் விமானக் குழுவினர் நான் சுயநினைவை இழக்காமல் இருக்க உதவினார்கள். அந்தச் சூழலில், வாழ்க்கையைக் கைவிடக்கூடாது என்பதில் மட்டுமே நான் முழு கவனத்தையும் செலுத்தினேன்” என்றார்.

சம்பவத்திற்குப் பிறகு முதலில் யாரிடம் பேசினீர்கள் என்ற கேள்விக்கு, ​​மிகுந்த உணர்ச்சியுடன், தனது இரண்டு வயது மகனிடம் பேசியதாக மச்சார் கூறினார்.

இந்த தாக்குதல் செப்டம்பர் 30 அன்று, துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ‘ஃப்ளைதுபாய்’ போயிங் 737 ரக விமானத்தில் நடைபெற்றது. அப்போது விமானத்தில் 170-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி அவசரகால பயன்பாட்டிற்கான கோடாரியைக் கொண்டு மச்சாரைத் தாக்கி, விமானத்தை தரையில் மோத முயன்றார். எனினும், அதிருஷ்டவசமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT