புதுடெல்லி: இண்டியா கூட்டணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒன்றிணையும் என்று தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, வாக்குத் திருட்டுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இது தொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நவ.1, ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி ஒன்றிணைய உள்ளது.
வாக்குத் திருட்டுக்கு எதிரான இந்தப் போராட்டம், ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ள தேர்வு செய்யும் உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். மேற்கு வங்கத்திலும், பிற மாநிலங்களிலும் நடந்துள்ள இந்த வாக்கு கொள்ளை குறித்து மவுனம் கலைத்து (தேர்தல் ஆணையம்) பதில் அளிக்க வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சந்தேகங்கள், வாக்காளர் தரவுகள் குறித்த கேள்விகள், வாக்காளர் பட்டியல் மீதான சந்தேகங்கள், வாக்கு எண்ணிக்கை தொடர்பான சவால்கள் ஆகியவை குறித்து பதில் அளிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்குரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சூழலில், மவுனம் காப்பது தீர்வாகாது. நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியலமைப்பை காக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று காலை வெளியிட்ட வீடியோவில், “டெல்லி ராம்லீலா பேரணி ஜனநாயகத்தைக் காக்கவும், வாக்குத் திருட்டை தடுக்கவும், அரசியலமைப்பைக் காக்கவுமான பேரணி. இது எந்த ஒரு அரசியல் கட்சிக்குமான பேரணி அல்ல. இது இந்தியாவின் ஆன்மாவுக்கான பேரணி.
நரேந்திர மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் மீது அதிருப்தியடைந்த அனைவரும் வாருங்கள்; ஜனநாயகத்தைக் காப்பாற்றி, அரசியலமைப்பை பாதுகாக்க விரும்புபவர்கள் அனைவரும் வாருங்கள். அதற்கான ஒரே போராட்டம்; தேசத்தின் போராட்டம் இது.
காவல் துறையைப் பற்றியோ, தடியடியைப் பற்றியோ கவலைப்படாதீர்கள். தங்கள் தந்திரங்களைச் செயல்படுத்தும் துணிச்சல் பாஜகவுக்கு இருக்காது.
எங்களோடு இணைந்து நடைபயணம் மேற்கொள்ளுங்கள். இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், இந்திய தேசத்தைக் காக்கவும் நாம் ஒன்றிணைந்து நடப்போம். எதற்கும் அஞ்சத் தேவையில்லை.
அனைத்து மாணவர் அமைப்புகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் சரி, இந்தியா தாக்குதலுக்கு உள்ளாகிறது, நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறீர்கள், உங்கள் கருத்துக்களும் சிந்தனை முறைகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என்று நீங்கள் உணர்ந்தால் எங்களுடன் வந்து இணையுங்கள்.
இது ஒரு மிகச் சிறப்பான நடைபயணமாக அமையும். இது இந்த நாட்டின் ஆன்மாவைக் காப்பதற்கான நடைபயணம். உங்கள் அனைவரையும் அங்கே சந்திக்கும் ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.