இந்தியா

“உலகின் முதன்மை நாடாக இந்தியா மாற விரும்புவதன் காரணம்...” - சி.பி.ராதாகிருஷ்ணன் விவரிப்பு

மோகன் கணபதி

கட்டாக்: “உலகின் முதன்மையான நாடாக இந்தியா மாற விரும்புவதற்கான காரணம், பிற நாடுகளுக்கு நாம் கட்டளையிட வேண்டும் என்பதற்காக அல்ல; எந்தவொரு நாடும் நம் நாட்டுக்கு கட்டளையிடக் கூடாது என்பதற்காகவே” என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் கட்டாக் நகரில் ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஐகானிக் டவர் கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், “எல்லோருடைய மனதிலும் ஒரு கேள்வி உள்ளது. நாம் ஏன் உலகின் முதன்மையான நாடாக மாற விரும்புகிறோம் என்பதே அது. இதற்குப் பின்னால் உள்ள எளிமையான, தெளிவான மற்றும் கலாச்சார ரீதியிலான நோக்கம் என்னவென்றால், நாம் மற்ற நாடுகளுக்கு கட்டளையிட வேண்டும் என்பதற்காகவோ, நமது விருப்பங்களை திணிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல. மாறாக, நமது பாரத அன்னை மீது எந்தவொரு நாடும் தேவையற்ற கட்டளைகளை பிறப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்பதற்காவே.

வளர்ச்சியடைந்த இந்தியா, தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை மிகுந்த தன்னம்பிக்கையுடனும், திறனுடனும், உலகளாவிய தலைமைத்துவத்துடனும் கொண்டாட விரும்புகிறது. மற்றவர்களுக்கு உதவுவது நமது கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சம். அனைவரையும் உள்ளடக்கி முன்னேறிச் செல்வதும் நமது கலாச்சாரத்தின் சாராம்சமே.

இந்த தேசிய இலக்கை அடைவதில் கல்வி நிறுவனங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இதை பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். பிரதமரின் தொடர் முயற்சிகளால் கடந்த 12 ஆண்டுகளில் உயர்கல்வித்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியள்ளது. கடந்த 2014ல் 760 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 1,400 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஐஐடிகளின் எண்ணிக்கை 16ல் இருந்து 23 ஆகவும், ஐஐஎம்களின் எண்ணிக்கை 13ல் இருந்து 22 ஆகவும், எய்ம்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கை 7-ல் இருந்து 13 ஆகவும் அதிகரித்துள்ளன.

2014-ல் 3.42 கோடியாக இருந்த உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் 4.5 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர்களைவிட மாணவிகள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். இது இந்தியாவில் வளர்ந்து வரும் பெண் சக்தியின் வெளிப்படையான அறிகுறியாகும். பெண்களுக்கு முறையான கல்வியை வழங்கினால்போதும், அவர்கள் தங்களைத்தாமே வலுப்படுத்திக்கொள்வார்கள்.

ஒடிசாவில் கணிசமான எண்ணிக்கையில் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் பழங்குடியின மாணவர்களுக்காக பள்ளி இணைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதன்மூலம், அவர்கள் கல்வியில் இருந்து பாதியில் விலகுவதை தடுத்து, உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்க முடியும்.

ஒரு தனிநபரின் உண்மையான உயரம் என்பது அவரது அறிவின் ஆழம் மற்றும் குணநலன்களின் வலிமையைக் கொண்டே அளவிடப்படுகிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் எப்போதும் உங்கள் எண்ணங்களில் நாடே முதலில் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். போதைப்பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் பிரஜ் மோகன் ராம், முதல்வர் மோகன் சரண் மாஜி, ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழக நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT