தாஷ்கண்ட்: நீண்டகால அடிப்படையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க உஸ்பெகிஸ்தானுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘ஒலி டரஜாலி டஸ்ட்லிக்’ விருது வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியும், உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவும் அதிபர் மாளிகைக்கு ஒரே காரில் பயணம் செய்தனர்.
தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தாஷ்கண்டில் உள்ள ஒரு ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவிற்குச் சென்று அங்கு அமைந்துள்ள சுதந்திர நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அதிபர் மாளிகையில் இரவு விருந்துடன் கூடிய சந்திப்பு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பார்வையிட்டு யோகா குழுவினருடன் கலந்துரையாடினார்.
பின்னர் இன்று மதியம் பிரதமர் மோடியும், உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, கலாச்சாரம், உயர் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, ஆயுர்வேதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அகழ்வாராய்ச்சி, சுற்றுலா, கனிம வளம், புவியியல் ஆராய்ச்சி தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக நீண்டகால அடிப்படையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க உஸ்பெகிஸ்தானுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதிகாரப்பூர்வ சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடியும் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையிலான ராஜ்ஜிய ரீதியிலான உறவு 15 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்த நேரத்தில் இரு நாடுகள் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு உஸ்பெகிஸ்தான் அதிபர் சிறப்பு விருந்து அளித்தார். அப்போது அவருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், செயலாளர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இரு நாடுகளின் தொழிலதிபர்கள் இணைந்து சிறப்பு உச்சி மாநாட்டை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. நீண்டகால அடிப்படையில் இந்தியாவுக்கு யுரேனியத்தை வழங்க உஸ்பெகிஸ்தான் முன்வந்திருக்கிறது. இதற்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
வரும் 2030-ம் ஆண்டில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் 5 பில்லியன் டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அரியவகை கனிமங்கள், மரபுசாரா எரிசக்தி, விண்வெளி, அணு சக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதேபோல உஸ்பெகிஸ்தானும் வளர்ச்சி அடைந்த நாடாக உருவெடுக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இந்த லட்சியத்தை எட்ட இரு நாடுகளும் பரஸ்பரம் இணைந்து செயல்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உஸ்பெகிஸ்தான் கடந்த 1991-ம் ஆண்டு தனி நாடாக உதயமானது. அந்த நாட்டில் இயற்கை எரிவாயு, யுரேனியம், தங்கம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன.
இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தானுக்கு மருந்துகள் மற்றும் தொழில் துறைக்கு தேவையான இயந்திரங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாட்டில் இருந்து உரங்கள், பழங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. கல்வி, தகவல் தொழில்துட்ப துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘ஒலி டரஜாலி டஸ்ட்லிக்’ ‘Oliy Darajali Do'stlik’ விருது வழங்கப்பட்டது.
பிரதமர் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றது இது 4-வது முறையாகும். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் கிர்கிஸ்தான் நாட்டுக்குச் செல்கிறார்.