இந்தியா

“இந்திய விவசாயிகளை அழிக்கவல்லது அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்” - ராகுல் காந்தி

வெற்றி மயிலோன்

பர்னாலா: “அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளை அழிக்கவல்லது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் நடைபெற்ற மஸ்தூர் கிசான் மகா பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம், விவசாயத் துறை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்கு மாதங்களாக முடங்கி கிடந்தது. நான்கு மாதங்களாக செய்யாத வேலையை, பிரதமர் ஏன் 15 நிமிடங்களில் செய்தார்?

அந்த வர்த்தக ஒப்பந்தம் ஏன் திடீரென கையெழுத்தானது? இந்திய பிரதமர் அங்கு நம் நாட்டுக்கான மரண வாரன்ட்டில் கையெழுத்திட்டதற்கு எத்தகைய அழுத்தம் காரணம்?

பிரதமர் மோடி தனது விவசாயிகளுக்கான மரண வாரன்ட்டில் கையெழுத்திட்டார். அவர் எங்கள் தரவுகளை வழங்கினார். அவர் எங்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மரண வாரன்ட்டில் கையெழுத்திட்டார்.

          

மேலும், ஒவ்வொரு ஆண்டும் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்க பொருட்களை இந்தியா வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த ஒப்பந்தம், இந்திய விவசாயிகளை அழிக்கவல்லது.

வேளாண் துறைக்கான சந்தையை திறந்துவிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருள்கள் இந்தியச் சந்தைக்குள் நுழைவதோடு, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

நரேந்திர மோடி விவசாயத் துறையின் கதவைத் திறந்துவிட்டார். அமெரிக்கப் பொருட்கள் பாய்ந்து நம் விவசாயிகள் நாசமாகிவிடுவார்கள்” என்றார் ராகுல் காந்தி.

SCROLL FOR NEXT