புது டெல்லி: “இந்தியா - இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த ஒப்பந்தம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த ஒப்பந்தம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான உறவில் ஒரு முக்கியமான தருணமாகும். ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை நடைமுறைக்கு வருவதன் மூலம், இரு நாட்டின் பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும்.
இந்த ஒப்பந்தங்கள், இரு நாடுகளின் கூட்டு லட்சியங்களை மக்களின் வாழ்வை மேம்படுத்தும் உறுதியான வாய்ப்புகளாக மாற்றுகின்றன.
இந்த வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். பல துடிப்பான துறைகள் இங்கிலாந்தின் சந்தையில் இனி வலுவாக நுழைய முடியும்.
மேலும், இது தொழில்நுட்பம், தொழில்துறை சேவைகள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதுடன், திறமையான இந்தியர்கள் அங்கு சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தமானது, இங்கிலாந்தில் தற்காலிகமாகப் பணியாற்றும் இந்திய தொழில்துறை நிபுணர்களுக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குவதோடு, இந்திய நிறுவனங்களின் போட்டித் தன்மையையும் வலுப்படுத்தும்.
இத்தருணம் நமது இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையையும், வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்கால நோக்குடைய நல்லுறவையும் உருவாக்கும். கூட்டு வளர்ச்சியை நோக்கி இந்தியாவும் இங்கிலாந்தும் தொடர்ந்து இணைந்து செயல்படும்” என்றார்.
இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இந்தியா - இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வரும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 99% ஏற்றுமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரிகள் நீக்கப்பட உள்ளன. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் ஜவுளித் துறை, ரத்தினங்கள் மற்றும் நகைகள், மருந்துத் துறை, வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கு பெரும் நன்மைகளை வழங்க வழிவகை செய்யும் எனக் கருதப்படுகிறது.
மேலும், இந்திய நுகர்வோர் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கார்கள் மற்றும் விஸ்கியை குறைந்த விலையில் பெறும் வாய்ப்பும் உருவாகலாம். அதேசமயம், சமையல் கலைஞர்கள், யோகா பயிற்சியாளர்கள் போன்ற தொழில்முறை நிபுணர்கள் எளிதான பயண வசதிகள் மற்றும் விசா சலுகைகளால் பயன்பெறலாம்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து விதிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மீதான 70% வரையிலான வரிகள், கடல்சார் பொருட்கள் மீதான 21%-க்கும் அதிகமான வரிகள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீதான 18 சதவீத வரிகள், தோல் மற்றும் காலணி தயாரிப்புகள் மீதான 16 சதவீதம் வரையிலான வரிகள் மற்றும் ஜவுளி வகைகள் மீதான சுமார் 12 சதவீத வரிகள் ஆகியவை பூஜ்ஜியமாக குறைக்கப்படும். இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதிகளை கணிசமாக அதிகரிக்கும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான வாகன இறக்குமதி வரி குறிப்பிட்ட ஒதுக்கீடுகளின் கீழ் தற்போதுள்ள சுமார் 110-லிருந்து 10% ஆகக் குறைக்கப்படும். முதல் 15 ஆண்டுகளில் 3.78 லட்சம் யூனிட்டுகள் வரையிலான வழக்கமான இன்ஜின் கொண்ட இங்கிலாந்தின் பயணிகள் கார்களை (வெகுஜன சந்தை மாடல்கள் உட்பட) சலுகை வரியில் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதிக்கும்.
இதுபோல 20,000 முதல் 80,000 பவுண்டு வரையிலான விலை வரம்பில் உள்ள இந்திய மின்சார, ஹைபிரிட் மற்றும் ஹைட்ரஜன் பயணிகள் கார்களுக்கு, 6-வது ஆண்டிலிருந்து வரி இல்லாத ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும். இதன் மொத்த ஒதுக்கீடு 15-வது ஆண்டில் 88,000 யூனிட்டுகளாக உயர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடரும்.
இது டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் மாருதி சுசூகி போன்ற இந்திய உற்பத்தியாளர்களுக்கு பெரும் பயனளிக்கும். அதேநேரம், உள்நாட்டு வெகுஜன சந்தை மின்சார வாகன பிரிவைப் பாதுகாக்க இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.