புதுடெல்லி: அரபிக் கடலில் இந்திய கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் மோதியதை அடுத்து, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகப் பொறுப்பாளர் இன்று (புதன்கிழமை) வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டார். கடலில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத, தொழில்முறைக்கு ஒவ்வாத வகையில் இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்றுடன் மோதிய சம்பவம் குறித்து அவரிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சர்வதேசக் கடல் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை. என்றாலும், ஏப்ரல் 1991-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான 'ராணுவப் பயிற்சிகள், ஒத்திகைகள் மற்றும் படைகளின் நடமாட்டம் குறித்த முன்கூட்டிய அறிவிப்பு' தொடர்பான ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை நேரடியாக மீறும் வகையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் செயல்பாடு அமைந்திருந்தது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, அனைத்து ராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படுவதையும், இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிமுறைகளை மதித்து நடப்பதையும் உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு அந்நாட்டுப் தூதரக பொறுப்பாளரிடம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பாளருக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற கண்டனத்தைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரி, வெளியுறவு அமைச்சகத்தின் ஜன்பத் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் சுமார் 30 நிமிடங்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல் குறித்த விவரங்கள்: இந்தச் சம்பவம் செப்டம்பர் 15 அன்று மாலை வட அரேபியக் கடலில் ஓமனுக்கு கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளது. அங்கு வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் போர் கப்பலுக்கு அருகில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் வந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதுபோன்ற சம்பவம் நிகழ்வது இது இரண்டாவது முறையாகும். 2011 ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையின் பாபர் கப்பலுக்கும் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கோதாவரி கப்பலுக்கும் இடையே இதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது.