பிரதமர் மோடி
புதுடெல்லி: “உலகளவில் ஒவ்வொரு தளத்திலும் தெற்குலக நாடுகளின் நலன்களுக்காக இந்தியா வலுவாக வாதிட்டு வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் 28வது மாநாட்டில் (CSPOC) இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, “உலகளவில் ஒவ்வொரு தளத்திலும் இந்தியா தெற்குலக நாடுகளின் நலன்களுக்காக வலுவாக வாதிடுகிறது. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்ற போது, தெற்குலக நாடுகளின் கவலைகளை அப்போது உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் இந்தியா பதிவு செய்தது. நாங்கள் செய்யும் எந்தவொரு கண்டுபிடிப்புகளும், ஒட்டுமொத்தமாக தெற்குலக மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கு பயனளிப்பதை உறுதி செய்வதே இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சியாகும்.
தெற்குலக நாடுகளில் உள்ள நமது கூட்டாளி நாடுகளும் இந்தியாவில் உள்ளதைப் போன்ற அமைப்புகளை உருவாக்கக்கூடிய வகையில், நாங்கள் வெளிப்படையான மூல தொழில்நுட்ப தளங்களை உருவாக்கி வருகிறோம்.
பொது நலன் என்ற உணர்வால் உந்தப்பட்டு, நாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் செயல்படுகிறோம், யாரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்கிறோம். இந்த அர்ப்பணிப்புதான் சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவிற்கு உதவியது. இந்தியாவில், ஜனநாயகம் உண்மையாகவே பலன்களை வழங்குகிறது. இந்தியாவில், ஜனநாயகம் என்பது கடைக்கோடி மக்களுக்கும் பலன்களை வழங்குகிறது.
இந்தியாவின் 2024 பொதுத் தேர்தலில் சுமார் 980 மில்லியன் மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்திருந்தனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும், 700-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தேர்தலில் பங்கேற்றன. இந்த வாக்காளர் எண்ணிக்கை சில கண்டங்களின் மக்கள்தொகையை விடப் பெரியது. தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும், டெல்லியின் முதல்வராகவும் பெண்கள் உள்ளனர்.
இந்தியாவின் ஜனநாயகம் ஆழமான வேர்களால் தாங்கப்படும் ஒரு பெரிய மரம் போன்றது. விவாதங்கள், உரையாடல்கள் மற்றும் கூட்டு முடிவெடுக்கும் நீண்ட பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு. இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறது. நமது புனித நூலான வேதங்கள் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானவை. மக்கள் கூடிப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, விவாதங்களுக்கும் உடன்பாட்டிற்கும் பிறகு முடிவுகள் எடுக்கப்பட்ட சபைகளைப் பற்றி அவை குறிப்பிடுகின்றன” என்றார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், 42 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 61 சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மற்றும் 4 பகுதி தன்னாட்சி பெற்ற நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.