புதுடெல்லி: மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி ஹேக் நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம் சிந்து நதி நீர் தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்க அல்லது தலையிட அந்த அமைப்புக்கு எவ்வித சட்டப்பூர்வ அதிகார வரம்பும் இல்லை.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளுக்குப் புறம்பாக, உலக வங்கியால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த நடுவர் நீதிமன்றத்தின் செயல்பாடுகளையோ, அதன் தீர்ப்புகளையோ இந்தியா ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை.
எனவே, இந்த நீதிமன்றத்தில் இந்தியா ஆஜராகவும் இல்லை; அதன் முந்தைய அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கவோ அல்லது தீர்ப்பளிக்கவோ இந்த நடுவர் மன்றத்துக்கு எந்த உரிமையும் இல்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா எடுத்த முடிவு தொடர்ந்து அமலில் இருக்கும்.