புதுடெல்லி: ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் அனைத்து உலக அமைதி ஆய்வுக் கழகம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2025-ம் ஆண்டில் இந்தியா தனது ராணுவத் தேவைக்காக 92.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.9% அதிகமாகும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்த இந்தியா தனது பாதுகாப்புச் செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளது. உலகளாவிய ராணுவச் செலவினங்களில் இந்தியாவின் பங்கு 3.2 சதவீதமாக உள்ளது.
92.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை 2025-ல் செலவிட்டு இந்தப் பட்டியலில் 5-ம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்த வரிசையில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் ரஷ்யாவும், 4-ம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளன. அமெரிக்கா 1,480 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், சீனா 336 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் ராணுவத்துக்காக செலவிட்டுள்ளது.
ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் தற்போது 31-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.