கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர 3 அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா தயாரித்து அனுப்பியுள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா உட்பட பல நாடுகள் முயன்று வருகின்றன. போரை நிறுத்த ஆக்கப்பூர்வமான திட்டங்களை இந்தியா வழங்கியுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதேபோல், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், இந்தியாவின் திட்டங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளதாக கூறியிருந்தார். இதனிடையே, போரை நிறுத்த ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 3 அம்ச அமைதித் திட்டம் ஒன்றைத் தயாரித்து இந்தியா அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றபோது இந்த 3 அம்ச அமைதித் திட்டம் குறித்து உக்ரைனிடம் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த அமைதித் திட்டம் இந்தியாவிடமிருந்து பெறப்பட்டுள்ளதை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா உறுதிப்படுத்தினார். ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர துருக்கி, எகிப்து, அமெரிக்கா, இந்தியா ஆகிய 4 சர்வதேச நாடுகளின் முயற்சிகளில் இந்தியாவின் திட்டமே மிகவும் விரிவானது என்று ஆன்ட்ரி தெரிவித்துள்ளார்.