ஆக்ரா/புதுடெல்லி: இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூஸிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.88 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும் என்றும், இருதரப்பு வர்த்தகம் இருமடங்காக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தோல் தொழிலுக்குப் புத்துயிர்
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னதாக, ஆக்ராவில் சிறு குறு தொழில்துறையினருடன் அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியா-நியூஸிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆக்ராவின் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை வழங்கும். இந்தியாவிலிருந்து நியூஸிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இறக்குமதி வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 2.4 பில்லியன் டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகம் பன்மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு கோயல் கூறினார்.
இந்தியா - நியூஸிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
வரி இல்லா ஏற்றுமதி: ஜவுளி, பிளாஸ்டிக், தோல் மற்றும் பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து ஏற்றுமதிப் பொருட்களுக்கும் நியூஸிலாந்து சந்தையில் 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு: இந்தியத் தொழில்துறையினருக்கு நற்செய்தியாக, தற்காலிக வேலைவாய்ப்பு விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த 5,000 இந்திய வல்லுநர்கள் நியூஸிலாந்தில் 3 ஆண்டுகள் வரை தங்கிப் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேவைத் துறை: தகவல் தொழில்நுட்பம், கல்வி, நிதிச் சேவைகள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இந்திய நிறுவனங்கள் நியூஸிலாந்தில் கால்பதிக்கச் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயப் பொருட்கள்: நியூஸிலாந்தின் ஆப்பிள், கிவிபழம் மற்றும் தேன் வகைகளுக்கு இந்தியா வரிச் சலுகை அளித்துள்ளது. இருப்பினும், இவை குறிப்பிட்ட அளவு மற்றும் குறைந்தபட்ச இறக்குமதி விலைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே அனுமதிக்கப்படும்.
உள்நாட்டுத் துறைகள்
இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சில முக்கியத் துறைகளை இந்த வரி விலக்கு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலக்கி வைத்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
பால் பொருட்கள்: பால், தயிர், பாலாடைக்கட்டி போன்ற பால் பண்ணைப் பொருட்களுக்கு வரிச் சலுகை கிடையாது.
விவசாயம்: வெங்காயம், கொண்டைக்கடலை, சோளம் மற்றும் பாதாம் போன்ற பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படவில்லை.
இதர பொருட்கள்: தங்கம், ஆபரணங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை முதன்முதலில் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 2015-ல் நிறுத்தி வைக்கப்பட்ட பேச்சுவார்த்தை, கடந்த 2025 மார்ச் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு, அதே ஆண்டு டிசம்பரில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. 2024-25 நிதியாண்டில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 1.3 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.