புதுடெல்லி: எந்த வடிவிலான தீவிரவாதத்துக்கும் இந்தியா அடிபணியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காமில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவு கூர்கிறேன். அவர்கள் என்றும் மறக்கப்பட மாட்டார்கள்.
இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் எப்போதும் இருக்கும். ஒரு தேசமாக, நாம் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றிணைந்து நிற்கிறோம். எந்த வடிவத்திலான தீவிரவாதத்துக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. தீவிரவாதிகளின் கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய ராணுவமும் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் இந்த நாளை நினைவு கூர்ந்தது. ராணுவத்தின் எக்ஸ் தள பதிவில், “இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கான பதிலடி உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதி வழங்கப்படும். எப்போதும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் மகாதேவ்' குறித்த ஒரு வரைபடத்தைப் பகிர்ந்துள்ள ராணுவம், “இது ஒரு காலத்தின் விஷயம் மட்டுமே. 300 சதுர கி.மீ பரப்பளவிலான கடினமான நிலப்பரப்பில், 93 பகல் மற்றும் இரவுகள் இடைவிடாது தேடுதல் வேட்டை நடத்தி, 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது” என்று பதிவிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. எல்லையைத் தாண்டியுள்ள (பாகிஸ்தான்) தீவிரவாதக் கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புகளுடன் தொடர்புடைய 9 முக்கிய ஏவுதளங்கள் அழிக்கப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலால் 4 நாட்கள் சிறிய அளவில் போர் மூண்டது. பின்னர் இஸ்லாமாபாத்தின் கோரிக்கையை ஏற்று மே 10ம் தேதி போர் நிறுத்தம் எட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்புப் படையினர் ‘ஆபரேஷன் மகாதேவ்' மூலம் பஹல்காம் படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய 3 தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொன்றனர்.