புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி - நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இடையே டெல்லியில் இன்று நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நேபாள பிரதமராக கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற பாலேந்திர ஷா, முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த அவர், இன்று பிரதமர் நரேந்திர மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, விண்வெளி, பாதுகாப்பு, சுகாதாரம், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - நேபாளம் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
விண்வெளி மற்றும் தகவல் தொடர்பு துறையில் தெற்காசிய செயற்கைக்கொளைப் பயன்படுத்துவதற்கான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வலையமைப்பை நிறுவுவது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் நேபாளத்தின் தகவல் மற்றும் தொடர்பு அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
காவல் துறை மற்றும் தடய அறிவியல் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், குஜராத்தின் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கும், நேபாள காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறைக்கும் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் நேபாளத்தின் தேசிய காவல் அகாடமிக்கும் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நேபாள அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாடு தொடர்பாக இந்தியாவின் தேசிய நல்லாட்சி மையத்துக்கும், நேபாள நிர்வாகப் பணியாளர் கல்லூரிக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சுகாதாரத் துறையில் இரு நாடுகளுக்கு இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஒன்று, இரு நாடுகளின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையே சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். மற்றொன்று, ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கானது.
மேலும், நிலையான நகர்ப்புற மேம்பாடு, கால்நடை, மீன்வள மேம்பாடு ஆகிய துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.