நொய்டா: ”தீவிரவாதத்துக்கு எதிரான எந்த வகையான தாக்குதலுக்கும் இந்தியா முழுமையாக தயாராக உள்ளது” என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் நொய்டா நகரில் நேற்று தனியார் செய்தி நிறுவனம் சார்பில் நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியா அமைதியை விரும்புகிறது. ஒருபோதும் போரை விரும்பியதில்லை. உலகின் எந்த நாட்டின் நிலத்தையும் கைப்பற்ற இந்தியா விரும்புவதில்லை. யாரையும் அச்சுறுத்தவும் விரும்பவில்லை. அதேசமயம் அமைதிக்கும் கோழைத்தனத்துக்கும் வித்தியாசம் உள்ளது.
இந்தியா, பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்ட ஒரு நாடு. ஆனால் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு ஏதேனும் ஒரு நாடு அடைக்கலம் வழங்கினால், அங்கேயே பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு முடிவுக்கு வருகிறது.
எங்கள் அண்டை நாடு (பாகிஸ்தான்) தொடர்ந்து தீவிரவாதத்தை அரசு கொள்கையாக கடைப்பிடித்து வரும் வரை, தீவிரவாதத்துக்கு எதிராக எந்தவிதமான தாக்குதலையும் நடத்த இந்தியா தயாராக உள்ளது. இந்த செய்தியை எங்கள் அண்டை நாட்டுக்கும் உலகுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்தியா ஒத்துழைப்பை விரும்புகிறது. ஆனால் தேசிய நலன்களை விட்டுக்கொடுத்து அல்ல. இந்தியா உலகளாவிய நிலைத்தன்மையை விரும்புகிறது.
ஆனால் தனது தன்னாட்சியை இழந்து அல்ல. எங்கள் கொள்கை மிகவும் தெளிவானது. இந்தியா அமைதியை ஆதரிக்கும் நாடு. அதே நேரத்தில் தனது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்யாது.
இந்தியா ஒரு நாகரிக சக்தி
ஒரு நாடு எழுச்சி பெறும்போது, ஏற்கெனவே வலிமையான நாடுகளுடன் மோதல்கள் ஏற்படுவது வழக்கம். மாற்றத்தை விரும்பும் சக்திகளுக்கும், தற்போதைய நிலையைத் தக்கவைக்க விரும்பும் சக்திகளுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்துள்ளன.
ஆனால் இந்தியாவுக்கு இந்த அணுகுமுறை பொருந்தாது. ஏனெனில், இந்தியா தற்போதைய நிலையைப் பாதுகாக்கும் சக்தியும் அல்ல; மாற்றத்தைத் திணிக்கும் சக்தியும் அல்ல. இந்தியா ஒரு நாகரிக சக்தி. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.