இந்தியா

மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று: நிச்சயம் உதவி செய்வதாக ஈரான் தூதர் உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எங்​களது மிக நெருங்​கிய நட்பு நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்​று. இந்த நேரத்​தில் எங்​களுக்கு இந்​தியா உதவி செய்து வரு​கிறது. நாங்​களும் இந்​தி​யா​வுக்கு நிச்சயம் உதவி செய்​வோம் என்று இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதர் முகமது பதாலி தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப்படைகள் மற்றும் ஈரான் இடையி​லான போர் தீவிரமடைந்து வரு​கிறது. இதன்​காரண​மாக ஈரானை ஒட்​டி​யுள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை அந்த நாட்டு ராணுவம் முடக்கி உள்​ளது. இதனால் உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உள்​ளது.

          

இந்த விவ​காரம் தொடர்​பாக மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர், ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அரக்​சி​யுடன் தொலைபேசி​யில் விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்து ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் இந்​திய எண்​ணெய் கப்​பல்​களுக்கு ஈரான் அனு​மதி அளித்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகின.

அதே​நேரம் இந்த விவ​காரத்​தில் ஈரான் அரசு இந்​தி​யா​வுக்கு எந்த உத்​தர​வாத​மும் வழங்​க​வில்லை என்று சில செய்தி நிறு​வனங்​கள் தெரி​வித்​தன. இதுதொடர்​பாக இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதர் முகமது பதாலி டெல்​லி​யில் நேற்று செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: ஈரான் - இந்​தியா இடையே மிக நீண்ட கால​மாக நட்​புறவு நீடிக்​கிறது. எங்​களது மிக நெருங்​கிய நட்பு நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்​று. ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​திய சரக்கு கப்​பல்​கள் கடந்து செல்ல விரை​வில் அனு​மதி வழங்​கப்​படும்.

போரால் நாங்​கள் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளோம். இந்த நேரத்​தில் எங்​களுக்கு இந்​தியா உதவி செய்து வரு​கிறது. நாங்​களும் இந்​தி​யா​வுக்கு நிச்சயம் உதவி செய்​வோம். இந்​தியா - ஈரான் அரசுகள் இடையே ஒத்​துழைப்பை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்​.

தற்​போது ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​களில் இந்​திய கொடி​யுடன் 28 கப்​பல்​கள் நிலை​கொண்​டுள்​ளன. அவற்​றில் 750-க் ​கும் மேற்​பட்ட இந்​திய ஊழியர்​கள் உள்​ளனர். ஒட்​டுமொத்த வளை​குடா பிராந்​தி​யத்​தில் சுமார் 23,000 இந்​திய ஊழியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களு​டன் கப்​பல் போக்​கு​வரத்து இயக்​குநரகம் தொடர்ந்து தொடர்​பில் உள்​ள​தாக கூறப்​பட்​டுள்​ளது.

இதற்கிடையே, ஓமன் நாட்​டின் சோஹர் மாகாணத்​தில் நடத்​தப்​பட்ட ட்ரோன் தாக்​குதலில் 2 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​தனர். 10 இந்​தி​யர்​கள் காயமடைந்​தனர் என்று வளை​குடா நாடு​களுக்​கான இந்​திய வெளியுறவுத் துறை இணைச் செயலர் அசிம் ஆர்.மகாஜன் கூறினார். ஓமன் மீதான ட்ரோன் தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. எனினும், ஈரான்தான் தாக்குதலில் ஈடுபட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன.

பிஹாரை சேர்ந்த தேவநாதன் பிரசாத் சிங் (50), அமெரிக்க எண்ணெய் கப்பலில் இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். ட்ரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் பணியாற்றிய கப்பல் தீப்பிடித்தது. 15 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த தேவநாதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT