இந்தியா

“இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது” - புதின் பாராட்டு

மோகன் கணபதி

புதுடெல்லி: இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய - ரஷ்ய வணிக மன்றத்தில் உரையாற்றிய புதின், “எரிசக்தி பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், எரிவாயு விநியோகத்துக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காகவும் மட்டும் ரஷ்ய பிரதிநிதிகள் இந்தியா வரவில்லை. பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான எங்கள் பன்முக உறவை மேம்படுத்துவதே எங்களது நோக்கம்.

பல துறைகளில் இந்தியா பரந்த மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்றும், ஆனால் இதுவரை இரு தரப்பினரும் அதை முழுமையாக பார்க்கும் நிலை உருவாகவில்லை என்றும் பிரதமர் மோடி, தனிப்பட்ட முறையிலான உரையாடல்களின்போது என்னிடம் அடிக்கடி தெரிவிப்பார். அதற்காகவே, இந்திய - ரஷ்ய வணிக மன்றத்தை கூட்ட நாங்கள் முடிவு செய்தோம்.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான (வெளியுறவு) கொள்கையைப் பின்பற்றி வருகிறது. அதேநேரத்தில், மிகச் சிறந்த பலன்களையும் அடைந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று. பிரதமர் மோடியின் சிறந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் போன்ற மைல்கல் முயற்சிகளுக்கு நன்றி. இந்தியா தொழில்நுட்ப ரீதியாக இறையாண்மை கொண்டதாக மாறி வருகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் துறைகள் உலகில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன.

ரஷ்யாவும் இந்தியாவும் நீண்டகால வர்த்தக கூட்டாளிகள். கடந்த மூன்று ஆண்டுகளில் 80% வரை இருதரப்பு வர்த்தகம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 64 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ரஷ்யாவும் இந்தியாவும் பெரிய நுகர்வோர் சந்தைகளைக் கொண்டுள்ளன. இந்தியா தொழில்நுட்ப ரீதியாக இறையாண்மை கொண்டதாக மாறி வருகிறது என்பதையும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் துறைகள் உலகில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன என்தையும் இதன்மூலம் இந்தியா பலனடைந்து வருகிறது என்பதையும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்குமான பன்முக பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதில் நான் கவனம் செலுத்துகிறேன். இன்றைய சந்திப்புகளைத் தொடர்ந்து, இந்திய - ரஷ்ய பொருளாதார ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு ஆவணத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ரஷ்ய வணிக நிறுவனங்கள், இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகளை இன்னும் அதிக அளவில் பெறுவதற்கு தயாராக உள்ளன. இந்திய வணிகர்களின் அனைத்து முயற்சிகளையும் ரஷ்யா ஆதரிக்கும் என உறுதியளிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT