ஜகார்த்தா: இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் இந்தோனேசிய பொதுத் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே பிரதமர் மோடி - அதிபர் பிரபோவோ சுபியாண்டோ முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேற்று தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். அவரை, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தினார். இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு தலைவர்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பிரம்மோஸ் ஏவுகணை, மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறைத் துறை, கனிமங்கள், எஃகு விநியோகத் தொடர் தொழில்நுட்பத் துறை, வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகள், கடல்சார் பாதுகாப்பு, தேசிய பேரிடர் மேலாண்மை, தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி, தொழில்நுட்பம், புத்தாக்கம், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதேபோல், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும், இந்தோனேசிய பொதுத் தேர்தல் ஆணையத்துக்கும் இடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பன்முகத்தன்மையில் இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒன்றிணைந்துள்ளன. நமது நாடுகளின் தேர்தல் ஆணையங்களுக்கு இடையிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஜனநாயக ஒத்துழைப்பை நாம் மேலும் வலுப்படுத்துவோம்” என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையங்களுக்கு இடையேயான இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தோனேசியாவின் தேர்தல் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும்.
இந்தோனேசியாவின் தேர்தல் கட்டமைப்பை நவீனமயமாக்க உதவுவதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாக இருக்கும். 2004 முதல் தேசிய தேர்தல்களில் இந்தியா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறது. பூடான், நேபாளம், நமீபியா உள்ளிட்ட நாடுகளுடனும் இந்திய தேர்தல் ஆணையம் தனது தேர்தல் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.