ஜிந்த்: “மேற்கு ஆசியப் போர் மற்றும் அதனால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்ட போதிலும், இந்திய ரயில்வே சேவை முடங்கவில்லை. நாட்டின் வளர்ச்சியும் தடைபடவில்லை. மேற்கு ஆசிய மோதல் சூழல் 2014-க்கு முன்பே ஏற்பட்டிருந்தால் இந்திய ரயில்வே முடங்கியிருக்கும். எங்கள் ஆட்சியில் ரயில்வே கட்டமைப்பில் சுமார் 99 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் நகரங்களை இணைக்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, “இந்த ஹைட்ரஜன் ரயில் மூலம் நாடு பசுமைப் போக்குவரத்து நோக்கி ஒரு மிகப் பெரிய பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் சம்பந்தப்பட்ட மேற்கு ஆசியப் பகுதியிலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியிலும் போர் நடந்து வருகிறது.
இந்த கடல் வழித்தடத்தின் மூலமாகவே இந்தியாவுக்குப் பெருமளவிலான பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு மற்றும் விவசாயிகளுக்கான உரங்கள் வந்து சேருகின்றன. ஆனால், கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களாக, இந்த வழித்தடம் தொடர்ந்து ஒரு போர்க்களமாகவே இருந்து வருகிறது.
நான் பதவியேற்பதற்கு முந்தைய காலமான 2014-க்கு முன்பே இத்தகைய சூழல் ஏற்பட்டிருந்தால் இந்திய ரயில்வேயின் செயல்பாடுகள் முழுமையாக முடங்கியிருக்கும். அந்தக் காலத்தில், நாட்டின் பெரும் பகுதி ரயில்கள் டீசலில்தான் இயங்கின. அப்போது டீசல் விநியோகம் தடைபட்டிருந்தால், டீசலில் இயங்கும் ரயில்கள் எப்படிச் செயல்பட்டிருக்கும்? நாடு மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்திருக்கும்.
ஆனால் 2014-ன் நிலைமை தற்போது இல்லை. முன்கூட்டியே சிந்தித்து, பிரச்சினைகளுக்கான தீர்வுகளைச் செயல்படுத்திக் காட்டும் மோடி இங்கு இருக்கிறார். இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கல் பணிகள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1925-ல் தொடங்கப்பட்டாலும், அதிலிருந்து 2014 வரையிலான 90 ஆண்டுகளில் நாட்டின் ரயில்வே கட்டமைப்பில் 30 சதவீதம் மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 70 சதவீதம் டீசலைச் சார்ந்தே இருந்தது.
அந்த 90 ஆண்டுகளில் வெறும் 30 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருந்த நிலையில், முழுமையான மின்மயமாக்கலை அடைய இன்னும் 200 ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்திய ரயில்வே ஒருபோதும் முழுமையாக மின்மயமாக்கப்பட்டிருக்காது; தொடர்ந்து டீசல் பயன்பாட்டையே சார்ந்திருக்க வேண்டியிருந்திருக்கும்.
ஆனால், கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் ரயில்வே கட்டமைப்பில் கிட்டத்தட்ட 99 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, போர் மற்றும் அதனால் ஏற்பட்ட எரிபொருள் விநியோக நெருக்கடி இருந்தபோதிலும், இந்திய ரயில்வே சேவை முடங்கவில்லை. நாட்டின் வளர்ச்சியும் தடைபடவில்லை. ரயில்கள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து இயங்கின" என்று அவர் கூறினார்.
மேலும், “இன்று ஹரியானாவும், ஜிந்த் பகுதியும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. இங்கிருந்து முதல் ஹைட்ரஜன் ரயிலை நாடு பெற்றுள்ளது. நாட்டின் முதல் ரயில் மும்பை - தானேவுக்கு இடையே இயக்கப்பட்டது என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். அதேபோல், வரும்காலத்தில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் குறித்த செய்தி வரும்போது ஹரியானா, ஜிந்த், பானிபட் ஆகிய பெயர்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது.
நான் ஜிந்த் நகருக்கு வரும்போது எனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. பல பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அமைப்பு ரீதியிலான பணிகளுக்காக ஜிந்த் வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் இன்றும் மறக்க முடியாததாக உள்ளது” என்று பேசினார்.