இந்தியா

இந்தியா - சைப்ரஸ் உறவில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவு

பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா - சைப்ரஸ் இடையேயான உறவை ஆழமான ஒத்துழைப்பு கொண்டதாக மாற்ற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. சைப்ரஸ் அதிபருடான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவித்தார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக கடந்த புதன் கிழமை இந்தியா வந்த சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்த சந்திப்பை அடுத்து இரு தலைவர்கள் தலைமையில், இரு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பிரதமர் மோடி, “கடந்த பத்தாண்டுகளில் சைப்ரசில் இருந்து இந்தியாவுக்கான முதலீடு ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஏராளமான புதிய வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டை மீண்டும் இரு மடங்காக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம். இதைச் செயல்படுத்தும் வகையிலேயே இன்று நமது நம்பிக்கைக்குரிய உறவை, உத்தியுடன் கூடிய ஆழமான ஒத்துழைப்பு நிலைக்கு (strategic partnership) உயர்த்துகிறோம்” என தெரிவித்தார்.

அப்போது பேசிய சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ், “உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு கூட்டு பணிக்குழுவை அமைக்க இந்தியாவும் சைப்ரஸும் முடிவு செய்துள்ளன” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT