இடது: பேட்டல் கெலாட் | வலது: ஷெபாஸ் ஷெரீப்

 
இந்தியா

“வெற்று வார்த்தைகள்...” - பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

மோகன் கணபதி

நியூயார்க்: பாகிஸ்தானில் இருப்பது ஒரு பொம்மை அரசாங்கம் என விமர்சித்துள்ள இந்தியா, அந்த நாடு தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் அதற்கான விளைவுகளை அது சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் உரை அமைந்திருந்தது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 81-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்குள் செல்வதை தடுத்து திசை திருப்பும் இந்தியாவின் செயல் போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண, அங்கு சுதந்திரமான, பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் இந்தியாவுக்கு எதிரான உரைக்கு பதில் அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதித்துவத்தின் முதல் செயலாளர் பேட்டல் கெலாட், “ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித விழுமியங்கள் குறித்த சில பாசுங்குத்தனமான உபதேசங்ளை ஓர் ஆட்சியிடமிருந்து இங்கு நாம் கேட்டோம். ஆனால், அந்த ஆட்சியின் தலைநகரோ, இந்த தருணத்தில் அதன் சொந்த மக்களுக்கு எதிராகவே பலப்படுத்தப்பட்டு வருகிறது.

ராணுவத்தின், ராணுவத்தால், ராணுவத்துக்காக நடத்தப்படும் ஓர் ஆட்சியே பாகிஸ்தானில் உள்ளது. அவர்களின் பொம்மைகள் வரலாம்; போகலாம். ஆனால், அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதில் நமக்கு மயக்கம் இருக்கக் கூடாது.

பாகிஸ்தானின் எதார்த்த நிலை அதன் 27-வது அரசியலமைப்புத் திருத்தத்திலும், அதன் உண்மையான ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாள் சட்டப் பாதுகாப்பிலும் வெளிப்படுகிறது.

நவம்பர் 2025-ல் ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட 27-வது அரசியலம்புத் திருத்தம் என்பது, பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் தலைவர் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனிருக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து வாழ்நாள் பாதுகாப்பை வழங்குகிறது.

பாகிஸ்தானின் பிரதிநிதி சித்தரிப்பதைப் போல் அல்லாமல், பாகிஸ்தானும் அதன் கொள்கைகளும் உண்மையில் எத்தகையவை என்பதை இந்த பொதுச் சபை உணர்ந்துகொள்ளும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆண்டுதோறும் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்வதால் அவை உண்மையாகிவிடாது.

செப். 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25-ம் ஆண்டு நிறைவை நியூயார்க் நகரமும் உலகமும் அனுசரித்து 2 வாரங்களே ஆகின்றன. இந்தச் சூழலில்தான் ஷெபாஸ் ஷெரீபின் விசித்திரமான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இந்தச் சூழலை கருத்தில் கொள்வது முக்கியம். எனெனில், அந்த தாக்குதலின் சூத்திரதாரியான ஒசாமா பின்லேடன், பாகிஸ்தான் ராணுவத்தின் முதன்மை அகாடமிக்கு மிக அருகில்தான் வசித்து வந்தார்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஓர் அங்கம். அது எப்போதும் அப்படியே இருக்கும். காஷ்மீரைப் பற்றி நாம் பேச வேண்டுமானால், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் குறித்துப் பேசுவோம். ரவாலகோட் மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் கண்மூடித்தனமான கொலைகள், கொடூர வன்முறைகள், அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல்கள் குறித்து கேள்வி எழுப்புவோம்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நீண்டகாலப் பழக்கத்தை பாகிஸ்தான் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை குறிவைத்து மே 7, 2025-ல் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது.

பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை பயன்படுத்தப்படும். பாகிஸ்தானின் தொடர்ச்சியான பயங்கரவாதத்துக்கு பின்விளைவுகள் இருக்கும். இறை நிந்தனைச் சட்டங்களையே ஆயுதமாகக் கொண்ட ஓர் ஆட்சியிடம் இருந்து மதச் சகிப்புத்தன்மை குறித்த கருத்துகளை இந்த சபை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது உலகுக்குத் தெரியும். எந்தவொரு வெற்று வார்த்தைகளாலும் அதை திசை திருப்ப முடியாது” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT