புதுடெல்லி: ரியாத் விமான நிலையம் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த வாரத்தில் ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். இதில் வெளிநாட்டினர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 300 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் சவுதி மண்ணில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த சில நாட்களாக ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களையும், குறிப்பாக அக்டோபர் 10-ம் தேதி உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சொத்து சேதங்களை ஏற்படுத்திய கொடூரத் தாக்குதலையும் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சவுதி அரேபியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அந்நாட்டு மக்களுடனும் அரசுடனும் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது. அந்தப் பகுதியில் விரைவில் அமைதியும் இயல்புநிலையும் திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
களமிறங்கும் அமெரிக்கா?
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்க ராணுவம் உதவ வேண்டும் என்ற சவுதி அரேபியாவின் கோரிக்கைளை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து நிராகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “இருக்கலாம். நாங்கள் அதை பரிசீலித்து விரைவில் முடிவெடுப்போம்" என்றார்.